/indian-express-tamil/media/media_files/2025/08/27/vck-leader-thol-thirumavalavan-about-admk-bjp-rss-tamil-news-2025-08-27-21-42-44.jpg)
பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரை குறித்துப் பேசிய திருமாவளவன், "பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்புகள் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி வாக்குத் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், அ.தி.மு.க - ஆர்.எஸ்.எஸ் உறவு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் மனித உரிமை ஆர்வலர் என்பதாலும், சமூக நீதி மற்றும் அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பவர் என்பதாலும், இவருக்கு ஆதரவு அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
பா.ஜ.க இந்தப் தேர்தலை வேண்டுமென்றே திணிப்பதாக குற்றம்சாட்டிய அவர், "ஏற்கனவே இருந்த குடியரசு துணைத் தலைவர் பதவி விலகக் கட்டாயப்படுத்தப்பட்டார். அவருடைய நிலை என்ன என்பது தெரியவில்லை. குடியரசு துணைத் தலைவருக்கே இப்படி ஒரு நெருக்கடி வருவது அதிர்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.
மேலும், "இந்த தேர்தல் தமிழரா, தமிழர் அல்லாதவரா என்ற அடிப்படையில் அணுகப்படக் கூடாது. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க துணிவுள்ள ஒருவர் தேவை. ஆகவே, ஜனநாயக சக்திகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ், அ.தி.மு.க-வை வழிநடத்தினால் என்ன தவறு என்று எல். முருகன் பேசியது, அ.தி.மு.க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதைக் காட்டுகிறது என்று திருமாவளவன் குறிப்பிட்டார். பெரியார் வழியில் வந்த திராவிட இயக்கம் என்று அறியப்படும் அதிமுக, இப்போது கோல்வால்கர், வீர சாவர்க்கர் வழிவந்தவர்களால் வழிநடத்தப்படலாம் என்று சொல்வது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
"இது தவறா, தவறில்லையா என்பதற்கு அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தான் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் வலுப்பெறுவதற்கு அ.தி.மு.க துணைபோவது கவலை அளிக்கிறது. இது அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்" என்று அவர் எச்சரித்தார்.
பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரை குறித்துப் பேசிய திருமாவளவன், "பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்புகள் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி வாக்குத் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பீகார் சென்றதை வரவேற்கிறோம்" என்றார்.
தமிழகத்திலும் இதுபோன்ற முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட அவர், "சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தங்களுக்கு வாக்களிக்காதவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கவும், வெளியாட்களின் பெயர்களை இணைக்கவும் முயற்சிப்பது ஜனநாயக படுகொலை. தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.