Viduthalai Chiruthaigal Katchi leader Thol. Thirumavalavan Tamil News: வேங்கைவயல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்ட போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம், சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை. திமுகவுக்கு ஆதரவாக வி.சி.க செயல்படுகிறதா?" என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த திருமா," நாள் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. இத்தனை நாள் ஆகும் என்று வழக்குகளில் உறுதியாக சொல்ல முடியாது. ராமஜெயம் படுகொலையில், இத்தனை வருஷம் ஆகியும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம். அல்லது விசாரணையில் உறுதிப்படுத்தப்படாத தகவல் இருக்கலாம். ஆனால், அரசு தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்சனையில், யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை." என்று கூறினார்.
திமுக-விற்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா? என திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, "உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அரசுக்கு தலித்துக்கு எதிராக செயல்பட வேண்டிய கட்டாயம் இல்லை. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும். அதுல ஏதாவது அவசரம் இருக்கா? காலக்கெடு ஏதாவது இருக்கா? தி.மு.கவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம். நாளைக்குகூட கிருஷ்ணகிரியில் பேராட்டம் நடத்த போகிறோம்.
திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறதலேயே இப்படி நீங்கள் அநாகரீகமாக பேசக்கூடாது.. எல்லாமே அரசு செய்யுங்க.. என்னங்க ஆவேசம்? தி.மு.க காரனா நான்? இதெல்லாம் ரொம்ப அநாகரீகமான பேச்சு. அதிகாரிகளிடம் பேசிட்டு இருக்கோம். போராட்டம் நடத்திட்டு இருக்கோம். விசாரணை நடந்துட்டு இருக்கு. புனலானய்வு போய்ட்டு இருக்கு. நான் ஆவேசமா பேசறேன்னு சொல்றீங்க? இதுக்கு பெயர் ஆவேசமா? கையை நீட்டி பேச வேண்டாம் என்றால், நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா முன்னாடி குனிஞ்சு பேசணுமா?" என்று அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போதும், 'வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல' என்று திருமாவளவன் பேசியிருந்தார். இது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசை, நேரடியாக தாக்கி விமர்சித்திருப்பதாகவே பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.