/indian-express-tamil/media/media_files/2025/10/11/thiruma-2025-10-11-15-31-10.jpg)
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.
அப்போது சென்னை பாரிமுனை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது வழக்கறிஞர் ஒருவரின் பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் வி.சி.கவினர் ஒன்றுகூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, தாக்குதல் குற்றச்சாட்டு குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருந்தார். அதில், என் வண்டி மோதவில்லை... அவர் என் வாகனத்திற்கு முன்னால் மெதுவாக வேண்டுமென்றே சென்றார். என் கார் முன்பாக, இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இளைஞர் என்னைப் பார்த்துக் கொண்டுதான் சென்றார்.
வழக்கமாக முன்னே செல்லும் எஸ்காட் வாகனம் நேற்று என் காருக்குப் பின்னால் வந்தது. என் காருடன் வந்த அந்த இளைஞர், திடீரென வண்டியை நிறுத்தினார். முறைத்துக்கொண்டே காரை நோக்கி வந்தார். ஏதோ சத்தம் போட்டார். வண்டியில் நான் அமர்ந்து இருக்கிறேன் என்று தெரிந்தும், வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார். வண்டியை மேற்கொண்டு செலுத்த முடியாதவாறு, தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, என் வண்டியை நோக்கி, கைகளை ஓங்கி அசைத்துக்கொண்டே வந்தார். இந்நிலையில்தான், வி.சி.க.வினரில் ஓரிருவர், அவர் மீது கையால் ஓங்கி அடிக்க முயன்றனர்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை செங்கல்பட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் இச்சம்பவம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “ஒரு கட்சித் தலைவர், அவர் முன்னாடி போய் ஒருத்தர் இரு சக்கர வாகனத்தை நிறுத்துகிறார். அப்போது அவரது பாதுகாப்பு என்ன என்பது குறித்து யாரும் கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி வந்து அதை தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். இதேபோன்று, எடப்பாடி பழனிசாமி கார் முன்பு யாராவது நின்றால் இப்படி கேள்வி எழுப்புவார்களா? அந்த வழக்கறிஞர் எல்லோரையும் திமிராக முறைத்து பார்த்ததுக்கு தான் அடித்தார்கள். அடங்கமறு என்று தான் கூறியுள்ளேனே தவிர எந்த இடத்திலும் வன்முறையை தூண்டியதில்லை” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.