சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், அதற்கான கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும் வி.சி.க எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 6 ஆம் தேதி திங்கள்கிழமை கூடுகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, இன்று தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை வழங்கியுள்ளார். அந்த தீர்மானத்தில், சட்டமன்ற பேரவை விதி 55-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாகவும் வி.சி.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.