பஞ்சாயத்துத் தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோருக்குமே அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த எம்.பி-களுக்கு அலுவலகம் இல்லை என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
மேலும், எம்.பி.களுக்கு அலுவலகம் கிடைக்காதா என்று கேள்வி எழுப்பியுள்ள ரவிக்குமார், “தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா முதலான மாநிலங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளனவோ அவற்றைச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்புரம் எம்.பி-யுமான எழுத்தாளர் டாக்டர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரவர் தொகுதிகளில் அலுவலகம் கட்டித் தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பஞ்சாயத்துத் தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோருக்குமே அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகம் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி அல்லாத பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களே வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை. நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் முன்னணியில் நிற்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள்தாம். அவர்களை இப்படி நடத்துவது சரிதானா? வெளியூர் எம்.பி.கள் சென்னைக்கு வந்தால் அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் இல்லை. சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் வாடகைக்கு ஒரு அறை வாங்குவதற்குள் திரும்பவும் ஊருக்கே போய்விடலாம் என்றே எண்ணத் தோன்றும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா முதலான மாநிலங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளனவோ அவற்றைச் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ரவிக்குமார் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “2019 ஆம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுமே எம்.பிக்களுக்கு அண்டை மாநிலங்களைப்போல அலுவலகம் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருமாறு நான் கோரிக்கை வைத்தேன். ஆட்சி மாற்றம் நடந்த பிறகு தி.மு.க அரசிடமும் கோரினேன். பொதுப்பணித்துறை அமைச்சரிடமும், உள்ளாட்சித்துறை அமைச்சரிடமும் நேரிலும் சந்தித்துக் கேட்டேன். விழுப்புரத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்தபோது அந்தக் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்தேன். அதன் தொடர்ச்சியாக
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 16.05.2022 அன்று நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ( DISHA) கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் திருமாவளவனால் எழுத்துபூர்வமாக முன்வைக்கப்பட்ட கருத்துகளில் 4 ஆவதாகப் பின்வரும் கருத்து தெரிவிக்கப்பட்டது:
தமிழ்நாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் முதல் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் அனைவருக்கும் அலுவலகங்கள் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகங்கள் அரசால் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த அலுவலகமும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித வசதியும் செய்து தராத மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மாவட்ட அளவில் DISHA கமிட்டியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் அமைத்துத் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். இத்தனை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தது போல் அல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் அவர்களை உரிய கௌரவத்துடன் நடத்துவதுபோல இங்கும் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாக action taken report இல் தெரிவிக்கப்பட்டது. 17-வது மக்களவை முடிந்து 18 ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இதுவரை இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இப்போதாவது இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படுமா?” என்று ரவிக்குமார் எம்.பி கேட்டுள்ளார்.