Advertisment

எஸ்.சி பட்டியலை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா? வி.சி.க எம்.பி அச்சம்; ரவிக்குமார் - ஜோதிமணி - எல். முருகன் பேசியது என்ன?

எஸ்.சி பட்டியலை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா? என்று கேட்டு வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில், வி.சி.க எம்.பி ரவிக்குமார், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோருடன் நடந்த உரையாடலையும் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ravikumar

வி.சி.க எம்.பி ரவிக்குமார்

எஸ்சி, எஸ்டி-யில் இடஒதுக்கீடு நோக்கத்திற்காக உள் ஒதுக்கீடுக்கான உட்பிரிவுகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதன் மூலம், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவரில் அருந்ததியர்களுக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த தீர்ப்புக்கு பட்டியல் இனத்தில் உள் ஒதுக்கீடு பெறும் சமூகங்களைத் தவிர மற்ற சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், எஸ்சி இடஒதுக்கீட்டில் கிரிமி லேயர் முறையை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு, வி.சி.க, லோக் ஜன் சக்தி உள்ளிட்ட பட்டியலின கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், எஸ்.சி பட்டியலை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா? என்று கேட்டு வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில், வி.சி.க எம்.பி ரவிக்குமார், காங்கிரஸ் எம்.பி  ஜோதிமணி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோருடன் நடந்த உரையாடலையும் வி.சிக எம்.பி ரவிக்குமார் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது பதிவில் கூறியிருப்பதாவது: “கடந்த வாரத்தில் ஒரு நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தேன். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார். உச்ச நீதிமன்றம் அளித்த சப் கேட்டகரைசேஷன் தீர்ப்பைப் பற்றி ஏன் இதுவரை காங்கிரஸ் கருத்து எதுவும் கூறவில்லை ? என்று அவரிடம் கேட்டேன். 

“என்னிடமும் கேட்டார்கள். நான் இன்னும் அந்தத் தீர்ப்பைப் படிக்கவில்லை. நீங்கள் படித்திருந்தால் அதைப்பற்றி சொல்லுங்கள்” என்றார்.  அந்தத் தீர்ப்பின் சாராம்சமான விஷயங்களை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒன்றிய அமைச்சர் எல். முருகன், “ என்ன சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க?  என்று கேட்டார். “ சப் கேட்டகரைசேஷன் தீர்ப்பைப் பற்றி ரவி விளக்கிக் கொண்டிருக்கிறார்”  என்று ஜோதிமணி அவரிடம் சொன்னார். 

“தமிழ்நாடு அரசு இயற்றிய உள் ஒதுக்கீட்டுக்கான சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அவருக்கும் அது மகிழ்ச்சிதானே” என்று நான் சொன்னேன் . “தி.மு.க தான் எங்களை ஏமாத்திட்டாங்களே” என்றார் அவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  “என்ன அப்படி சொல்றீங்க?” என்று நான் கேட்டேன். “ஒதுக்கீடு கொடுத்துட்டு தகுதியானவங்க இல்லன்னா மத்தவங்கள வெச்சி நிரப்பிக்கிங்கன்னு ஆர்டர் போட்டுட்டாங்க.  அப்புறம் ரிசர்வேஷன் கொடுத்து என்ன பிரயோஜனம்?”  என்றார்.  

“ கடந்த 15 வருஷங்கள்ல அருந்ததியர் சமூக மக்கள் வேலையில சேர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், எம்.பி.பி.எஸ் மாதிரி உயர் படிப்புகள்ல சேர்வதற்கும் இந்த ஒதுக்கீடு பெரிய அளவுல உதவியிருக்கே அதப் போயி பிரயோஜனமில்லன்னு  சொல்றீங்களே” என்று நான் கேட்டேன். “ வெறும் 3% தானே கொடுத்து இருக்காங்க. 6% ல கொடுக்கணும்? “ என்றார். 

“ 6%  எப்படி வரும்? 2011 சென்சஸ்லகூட 2.9% தானே மக்கள் தொகை வந்திருக்கு?   என்று நான் கேட்டேன். 

“அது எப்படி?  இருக்கிற 18% ஐ மூணா பிரிச்சு அருந்தியிருக்கு 6% தேவேந்திரகுல வேளாளருக்கு 6%  ஆதிதிராவிடருக்கு 6%  என்று தானே கொடுக்கணும்?” என்று கேட்டுவிட்டு அவர் போய்விட்டார். 

அதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். “அவங்க அந்த அளவுக்கு இருக்க மாட்டாங்களா?”  என்று ஜோதி மணியும் கேட்டார்.  

“இல்லை” என்று சொன்னேன். 

“எஸ்சி-ல மூணு கேஸ்ட் தானே பெரிய கேஸ்ட் ? “ என்று அவர் மீண்டும் கேட்டார். 

“ஆமாம், ஆனா பர்சன்டேஜ் வேறுபடும்.  அருந்ததியர் 2.9% தேவேந்திர குல வேளாளர் 3.4% ஆதிதிராவிடர் பறையர் சேர்த்து 12.71%” என்று சொன்னேன். 

“அப்படியா?” என்று வியப்போடு அவர் கேட்டுக் கொண்டார். 

 2011-ம் ஆண்டு சென்சஸில் தமிழ்நாட்டில் இருக்கும் எஸ்சி சாதிகளின் மக்கள் தொகையைப் பிரித்து ஏற்கனவே கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ் அவர்கள் தயாரித்திருந்த அட்டவணை என்னிடம் இருந்தது. அதை போட்டோ காப்பி எடுத்து அடுத்த நாள் ஜோதி மணியிடம் ஒரு பிரதியைக் கொடுத்தேன். 

அமைச்சர் எல். முருகன் அவர்கள் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். ஒன்றிய பா.ஜ.க அரசின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர். அவர் அப்படி சொன்னதை எதைச்சையாக சொன்ன ஒன்றாக என்னால் கருத முடியவில்லை. பா.ஜ.க-வின் திட்டமாக அது இருக்குமோ? என்ற அச்சத்தை அது எனக்குள் எழுப்பி விட்டது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி பிரிவினரை இப்படி மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 6% என்று ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. 

திரு எல் முருகன் கூறுவதைத் தமிழ்நாட்டில் பலரும் நம்பத்தான் செய்வார்கள். ஏனென்றால் எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளின் மக்கள் தொகை என்னவென்று எவருக்கும் தெரியாது. எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளை ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் சாதிவாரியாகக் கணக்கெடுக்கிறார்கள் என்பது கூடப் பெரும்பாலோருக்குத் தெரியாது. 

எஸ்சி பட்டியலில் உள்ள அருந்ததியர் (7 சாதிகள்)  தேவேந்திர குல வேளாளர் (7 சாதிகள்) பறையர் + ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரின் மக்கள் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சென்சஸ் ஆப் இந்தியா இணையதளத்தின் பின்வரும் இணைப்பில் சென்று அதை டவுன்லோடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

https://censusindia.gov.in/nada/index.php/catalog/2135/download/5212/SC-33-00-14-DDW-2011.XLS 

அவ்வாறு டவுன்லோடு செய்ய முடியாதவர்கள் திரு கிறிஸ்துதாஸ் IAS Retd அவர்கள் சென்சஸ் விவரங்களைத் தொகுத்துத் தயாரித்த இந்த அட்டவணையில் அதைப் படித்துக்கொள்ளலாம்.” என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

வி.சி.க எம்.பி ரவிக்குமாரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment