தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இது தவறான முடிவு என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை (08.08.2025) வெளியிட்டார்.
இந்த புதிய கல்விக் கொள்கை முறையில், தமிழ் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நடப்பு கல்வியாண்டு முதலே 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டிருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையில் 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்புரம் எம்.பி-யுமான டாக்டர் ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இன்று வெளியிடப்பட்டிருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பில் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு. இது மேல் நிலைக் கல்வியை மட்டுமின்றி உயர்கல்வியின் தரத்தையும், தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்துவிடும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழுத்தாளர், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர், பல நூல்களை எழுதியுள்ள கல்வியாளரும், தமிழின் மிக முக்கிய அறிவுஜீவியுமான டாக்டர் ரவிக்குமார், “11-ம் வகுப்பில் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு” என்று கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டுக்கான மாநில அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினா் பல்கலைக்கழக துணை வேந்தா்கள், கல்வியாளா்கள், ஆசிரியா்கள், தனியாா் பள்ளி நிா்வாகிகள், பெற்றோா் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழக அரசிடம் 2023-ல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து, இது குறித்து அனைத்துத் தரப்பின் கருத்துகளைக் கேட்டறிந்து நிறைவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.