இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ள நிலையில். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமாக திருமாவளவன் ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ’நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன்.
இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தில் 4வது வர்ணமாகிய சூத்திரர்கள், மனு ஸ்மிருதியில் இழிவுபடுத்தப்பட்டது ஏன்?’ என்று பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில். ஆ.ராசாவிற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன் கூறுகையில்.
ஆ.ராசா பேசியது மனுதர்மம் சொன்னதை விளக்கிய ஒரு நடவடிக்கையாகும். இந்து சமூகத்தில் பிராமண இந்துக்கள் சத்ரிய இந்துக்கள், வைசிய இந்துக்கள் சூத்திர இந்துக்கள். என 4 வகை இந்துக்கள் இருக்கிறார்கள். இதில் சூத்திரவகையை சார்ந்த இந்துக்களை தான் மனுதர்மம் இழிவுப்படுத்துகிறது. அவர்களை உழைப்பாளர்களாக கருதாமல் அவர்களின் பிறப்பையே இழிவுபடுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார்கள். அண்ணாமலை போன்றோர்கள் எப்போதோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மனுதர்மத்தை இப்போது தூக்கி வைத்துக்கொண்டு தேவையில்லாமல் விவாதிக்கிறார் என்று கூறுகிறார்.
அவர் அறிந்து சொல்கிறாரா அறியாமல் சொல்கிறாரா என்று தெரியவில்லை. அந்த புத்தகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நாம் பேசவில்லை. நடைறையில் இருக்கின்ற சடங்கு சம்பரதாயங்களையும், கலாச்சராத்தையும் அடிப்படையாக வைத்துதான் பேசுகிறோம். இந்த சமூகம் மனுதர்மத்தின் அடிப்படையில் தான் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடுகள் தக்கவைக்கப்பட்டுள்ளன.
மனுதர்மத்தில் சொல்லப்பட்டதை வைத்துதான் பிராமணர்கள் மற்ற வர்ணத்தாரை விட மேலானவர்கள் என்று கருதுகிறார்கள். அதேபோல் பிராமணர்கள் மட்டுமே தமிழகத்தில் கோவில் கருவறையில் பூஜை செய்யும் உரிமையை பெற்றுள்ளார்கள். வேறு வர்ணத்தார் பூஜை செய்ய சட்டம் இயற்றினாலும் அதற்கு எதிர்ப்பும் கடுமையான விவாதங்களும் ஏற்படுகிறது. ஆகவே ஒட்டுமொத்த இந்தியாவும் இன்றைக்கும் அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் கூட மனுதர்மம்தான் இன்னும் கோலாச்சுகிறது என்பதை உணராமல் பேசுவது அபத்தமாகனது அரைவேக்காடானது.
இந்திய மண், இந்திய சமூகம் பண்பாடு, வாழ்வியல்முறை. அனைத்தும் வர்னாசிரமம் தர்மத்தின் அடிப்படையில் தான் இன்று இயங்குகிறது. எனவே மனுதர்தமம் என்பது எப்போதோ எழுதப்பட்ட ஒரு நூல் அல்ல. அது நடைமுறையில் இருக்கும் ஒரு வாழ்க்கை முறை. இது மனிதர்களை பாழ்படுத்துகிறது. இழிவுபடுத்துகிறது. அதைத்தான் சனாதனம் என்று நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
சமத்துவத்தை விரும்பக்கூடியவர்களாக இருந்தால், இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை நம்பக்கூடியவர்களாக இருந்தால். அண்ணாமலை உட்பட அனைவருமே சனாதனத்தை எதிர்க்க முன்வரவேண்டும். அல்லது பிராமணர் அல்லாது மோடி அமித்ஷா போன்றவர்களே மனசாட்சியோடு சிந்தித்தால், இந்த சனாதனத்தை எதிர்க்க அவர்கள் முன்வரவேண்டும். அதுதான் அவர்கள் செய்யவேண்டிய உண்மையான கடமை. ஆனால் இவர்கள் பிராமணர்களின் சேவகர்களாக எடுபிடிகளாக அவர்களுக்கு தொண்டு செய்யக்கூடிய தொண்டர்களாக இருப்பதால், அதை நியாப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.
ராசா அவர்கள் பேசியது அவருடைய கருத்தல்ல யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. ஆனால் வேண்டுமென்றே திரிப்பு வாதம் செய்வது அவர்களின் நோக்கமாக உள்ளது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்துள்ளது தொடர்பாக பேசிய திருமாவளவன், தமிழகத்தில் சங்பரிவார் கும்பல், மதவெறி அரசியலை விதைப்பதற்கு முனைந்திருக்கிறார்கள். இதுவரை வட இந்திய மாநிலங்களில் காணப்பட்ட காட்சிகள் இப்போது தமிழகத்திலும் முளைவிடும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு நீதிமன்ற அமைப்புகளே துணை போவதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் சனாதன சங்பவரிவார் கும்பலுக்கு தமிழகத்தில் சிவப்பு கம்பலம் விரிக்க நீதிமன்றங்கள் துணைபோவதாக இருப்பது தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது
தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையோடு இத்தகைய பிரச்சினைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். தமிழக மண்ணின் சிறப்பை பாதுகாக்க வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதே தமிழகம் அமைதியாக இருந்தது. இந்து இஸ்லாமியர் என்ற முரண்களோ மோதல்களோ வன்முறைகளோ இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருந்தது பெருமைக்குரியது. அப்படியான தமிழகத்தில் இப்போது மதவெறி அரசியலுக்கு தூபம் போடுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது. தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.