ஆதீனங்கள் செங்கோல் கொடுத்துவிட்டார்கள். எனவே, 'இது நல்ல ஆட்சியாகத்தான் இருக்கும்' என மக்கள் நம்பிவிட மாட்டார்கள். மாறாக, ‘ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குப் போய் இப்படி நற்சான்றிதழ் வழங்குகிறார்களே!’ என இந்த ஆதீனங்கள் மீதுதான் வருத்தப்படுவார்கள்! என விழுப்புரம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. செங்கோல் என்பதைப் பற்றி மிகப்பெரிய விவாதம் ஊடகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில், அயோத்திதாசப் பண்டிதர் ‘செங்கோல், கொடுங்கோல்’ என்பவை பற்றி எழுதிய கருத்துகள் கவனத்துக்கு உரியவையாக உள்ளன.
கொடுங்கோல் ஆட்சி எவ்வாறு இருக்கும், செங்கோல் ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி அயோத்திதாசப் பண்டிதர் தமிழன் இதழில் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார் ( ஏப்ரல் 17, 1912): “கொடுங்கோலென்பது தன்னவர் அன்னியரென்னும் பாகுபாடு உடையது” என அவர் கூறுகிறார். ‘இன்னின்னாருக்குத்தான் குடியுரிமை, மற்றவர்களுக்குக் குடியுரிமை இல்லை. இந்த நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த ஏதிலிகளை நாங்கள் பாதுகாக்க மாட்டோம்’ என ஒரு ஆட்சி கூறுமாயின் அது கொடுங்கோல் ஆட்சி என்பதே இதன் பொருளாகும்.
“தனது மகிழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதது ; குற்றம் செய்தவன் இவன், செய்யாதவன் இவன் எனக் கண்டறியாது தண்டிப்பது” ஆகியவை கொடுங்கோல் ஆட்சியின் பண்புகள் என்கிறார் அவர்.
“குடி மக்கள் எக்கேடு கெட்டாலும் அவற்றைப் பார்க்காமல் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும்; மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் அவர்களை சீரழிப்பதும்; தமது குடி மக்களுக்கு குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, முதலிய நலன்களைச் செய்து தராமல் தங்களது வசதிகளை மட்டும் பார்த்துக் கொள்ளுவதும்; தாங்கள் மட்டும் வண்டி, குதிரைகள் முதலானவற்றில் பயணிக்கும் வசதியை அனுபவிக்கலாம் ( இன்றைய காலகட்டத்தில் இதைத் தனி ஜெட் விமானம் எனத் திருத்திக் கொள்ளலாம்) , தங்கள் குடி மக்கள் வண்டி, குதிரைகளில் ஏறி முன்னே வந்தால் ஆத்திரப்படுவதும்;
குடிமக்களுக்குக் கொஞ்சம் செல்வம் பெருகி மாடி வீடுகளில் வாழ ஆரம்பிப்பார்களாயின் அவர்கள் வீட்டுக்கு அருகில் தங்கள் யானைகளையோ, ஒட்டகங்களையோ அனுப்பி அவற்றுக்கு உணவு வழங்க வேண்டுமென்று உத்தரவிடுவதும்; குடி மக்கள் சிறிதளவு வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தால் அவர்கள் செலுத்தவேண்டிய நியாயமான வரிகளுக்கு மேல் அந்நியாயமான வரிகளை விதித்து வதைப்பதும் ; சிறிய குற்றங்களுக்குப் பெரிய தண்டனையும்,பெரிய குற்றங்களுக்கு சிறிய தண்டனையும் என ( சாதி,மத அடிப்படையில்) சட்டங்களை ஏற்படுத்துவதும் ; முறையாக விசாரணை நடத்தாமல் தங்கள் விருப்பப்படி ஆட்சி புரிவதும்- இப்படியான கொடூரச் செயலையுடைய ஆட்சியைக் கொடுங்கோல் ஆட்சி என்று கூறலாம்” என்று அயோத்தி தாசர் விளக்குகிறார்.
“செங்கோல் என்பது தன்னைப்போல் பிறரை நேசிப்பதும்; தன்னவர், அன்னியரென்னும் வேற்றுமை இல்லாததும்; தான் வசதியாக வாழ்வதுபோல் தங்கள் குடிகளும் வாழவேண்டுமென்று கருதுவதும்; தாங்கள் வண்டி குதிரைகளிலேறி உலாவுதல்போல் தங்கள் குடிகளும் வண்டி குதிரைகளிலேறி உலாவு வதைக்கண்டு ஆனந்திப்பதும்; குடிகளுக்குண்டாகும் துன்பங்களைத் தங்களுக்குண்டானத் துன்பம் போலக் கருதி அவற்றைத் தீர்த்து வைப்பதும்; தங்களுக்கு டிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்துக் கொள்ளுவது போல் தங்கள் குடிகளுக்கும், குடிநீர் வசதி, விளக்கு வசதி, வீதி வசதி முதலியவைகளைச் செய்து சுகாதாரமளித்துவருவதும்; விவசாயிகளாயினும், கைத்தொழிலாளர்களாயினும், முன்னேற்றமடைந்து மகிழ்ச்சியாக இருப்பார்களாயின் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதும்;
அவர்கள் விவசாயம் கெட்டுப்போய், கைத்தொழிலும் இல்லாமல் வெறுமனே நிற்பார்களாயின், அவர்களுக்கு வேண்டிய நிதி உதவி அளித்தும், நிலம் வழங்கியும், விவசாயத்துக்குத் தேவையான கருவிகளைக் கொடுத்தும், விதை முதலானவற்றைக் கொடுத்தும் ஆதரிப்பதும்; அவரவர்கள் வருமானத்திற்குத் தக்க வரிகளை விதித்து அந்த வரித் தொகைகளைக் கொண்டே குடி மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதும்; நீதி வழங்கும்போது இவர் நம்மவர் இவர் அந்நியர் என்று பேதம் பார்க்காமல் அவரவர்களுக்கு உரிய நீதிபதிகளைக் கொண்டு விசாரித்து நீதி வழங்குவதும்; குடி மக்களுக்கு ஏற்படும் வியாதிகளை நீக்குதற்கும்; அவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது அதை முன்னின்று தடுத்து குடிமக்களைப் பாதுகாப்பதும்; குடிமக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தால் அரசாங்கமும் மகிழ்ச்சியாக நடக்கும் எனக் கருதுவதும்; தாங்கள் எத்தகைய வசதிகளை அனுபவிக்கிறார்களோ அத்தகைய வசதிகளை தமது குடிமக்களும் அனுபவிக்க
வேண்டுமென்று கருதுவதுமாகிய அன்பும் ஆறுதலும் கொண்ட ஆட்சியையே செங்கோல் ஆட்சி என்று கூறலாம்” என்று அயோத்தி தாசப் பண்டிதர் விவரித்துள்ளார்.
இந்த விளக்கத்தின்படி பார்த்தால் ஒன்றிய பா.ஜ,க அரசைக் கொடுங்கோல் ஆட்சியென்றே நாம் வகைப்படுத்த முடியும். சாதி, மத அடிப்படையில் நீதியை வளைப்பது, குடிமக்கள் மீது அதிக வரிவிதித்து வதைப்பது, வரிப்பணத்தில் விளம்பர ஆட்சி நடத்துவது எனக் கொடுங்கோல் ஆட்சியின் அத்தனை அம்சங்களும் கொண்டதாக பா.ஜ.க ஆட்சி உள்ளது.
‘ஆதீனங்கள் செங்கோல் கொடுத்துவிட்டார்கள். எனவே, இது நல்ல ஆட்சியாகத்தான் இருக்கும்’ என மக்கள் நம்பிவிட மாட்டார்கள். மாறாக, ‘ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குப் போய் இப்படி நற்சான்றிதழ் வழங்குகிறார்களே!’ என இந்த ஆதீனங்கள் மீதுதான் வருத்தப்படுவார்கள்!" என்று கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.