scorecardresearch

பெரியாரை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல: பி.பி.சி ஆவணப் படத்தை திரையிட்டு திருமாவளவன் பேச்சு

பெரியாரை எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல. சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரியாரை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல: பி.பி.சி ஆவணப் படத்தை திரையிட்டு திருமாவளவன் பேச்சு

பிரபல ஊடகமான பி.பி.சி சமீபத்தில் இந்தியா: மோடி கேள்விகள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது. 2002-ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தனர். இதை மையமாக கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணப்படத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான அரசு கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆவணப்படம் உண்மைக்கு புறம்பானது மற்றும் அரசுக்கு எதிரான பிரச்சாரப் படம் என மத்திய அரசு குற்றஞ்சாட்டி ஆவணப்படத்தின் சமூகவலைதள லிங்குகளை முடக்கி நீக்க உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் மாணவர் அமைப்பினர் பி.பி.சி ஆவணப்படத்தை திரையிடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் பி.பி.சி தயாரித்த ஆவணப்படம் தமிழில் திரையிடப்பட்டது. ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் வி.சி.க தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய திருமாவளவன், “நாட்டில் வேறு எங்கும் மொழி வழி அரசியல் பெரிதாகப் பேசப்படுவதில்லை.. தமிழ்நாட்டில் மட்டும் அது வலுவாக உள்ளது. இதன் காரணமாகவே இங்கு சனாதன அரசியல் வலுவாக உள்ளது. பாசிசம் இந்த மண்ணில் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்து தேசியவாதம் என்ற அடிப்படையில் உள்ளது. நாம் மொழி அடிப்படையிலான தேசியவாதம் பேசுகிறோம் அது தமிழ்தேசியம்.

நாட்டுடைமை அடிப்படையில் தேசியவாதத்தை காங்கிரஸ் பேசியது. நாம் அனைவரும் இந்தியர்கள் அடிப்படையிலான தேசியவாதம் அது. இவர்கள் பேசுவது மத அடிப்படையிலான தேசியவாதம். அதை வலுப்பெறச் செய்வதற்கு இஸ்லாமியர்களை எதிரியாக காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் இந்த தேசத்தை இந்துராஸ்டிரா என அறிவிக்க நினைக்கிறார்கள். அது நான் அவர்களின் நோக்கம்.

சனாதனத்தை உயர்த்திப்பிடிப்பது அவர்களின் சாதனையாக மாறி நிற்கிறது. ஜனநாயத்தை பாதுகாப்பது நம் முன் சவாலாக இருக்கிறது. இந்தியை எதிர்ப்பது, இந்துத்துவாவை, சனாதனத்தை எதிர்ப்பது தான் தமிழ்தேசியத்தின் அங்கம். தி.க, தி.மு.கவை எதிர்ப்பது திரிபுவாதம்.

பெரியாரை எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல. சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம். மோடி என்ற தனிப்பட்ட நபர் வளர்ந்து நிற்பதாக நினைக்க வேண்டாம். சனாதன கோட்பாடு அவருக்குப் பின்னால் நிற்கிறது. வெறுப்புணர்வின் உச்சத்தில் பி.பி.சி ஆவணப் படத்தை தடை செய்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vck screens bbc documentary in chennai

Best of Express