விழுப்புரம் மாவட்டம் வானூரில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு நேற்று(செப்.25) மணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டனர். விழாவில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 533 கிராம் தங்கத்தை திருமாவளவனுக்கு வழங்கினர்.
விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஹெச். ராஜா சீண்டி வருகிறார். தொடர்பு இல்லாத பிரச்சினையில் எல்லாம் எங்களை தொடர்புபடுத்துகிறார். விசிகவை தடை செய்ய வேண்டும் என ஹெச். ராஜா கூறுகிறார்கள். விசிகவின் மீதும் நாங்கள் பேசும் அரசியல் மீதும் எந்த அளவிற்கு அவருக்கு வெறுப்பு இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.
ஊடக வெளிச்சத்துக்காக பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தி.மு.க அரசை விமர்சிக்கிறார்கள். தி.மு.கவை விமர்சிப்பதன் மூலம் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்க முடியும் என பா.ஜ.க தலைவர்கள் கருதுகிறார்கள். விளம்பர மோகம் இருக்கிறது.
திமுகவை நாங்கள் தான் எதிர்க்கிறோம். நாங்கள் தான் விமர்சிக்கிறோம் என தி.மு.கவின் அடுத்த இடத்தை பிடிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. இதன் மூலம் கூட்டணி கட்சியான அ.தி.மு.க-வை பின்னுக்கு தள்ளப் பார்கிறார்கள். இதை அ.தி.மு.க உணர்ந்திருக்கிறதா என தெரியவில்லை. 2ஆவது இடத்தை பிடிக்க வேண்டும். தி.மு.க vs பா.ஜ.க என அரசியல் துருவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“