விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.கவும் பங்கேற்கலாம் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
வி.சி.கட்சி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், எதிர்க்கட்சியான அ.தி.மு.கவுக்கு அழைப்பு விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை தனது X பக்கத்தில் திடீரென பகிர்ந்தார். எனினும் வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவில், ' ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. அமைச்சரவையிலும் பங்கு' எனப் பேசியிருப்பார்.
திருமாவளவன் பேசிய வீடியோவில், "எதிர்த்து பேசக் கூடாது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது. உயர்ந்த பதவிக்கு வர ஆசைப்படக் கூடாது என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் இதற்கு முன் கூட்டணி ஆட்சியில் உள்ளவர்கள் இதைப் பற்றி குரல் உயர்த்தினார்களோ இல்லையோ, 2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தியது வி.சி.க.
கேப்பினட்டில் பவர் Share. பவர் Share வேறு, கேபினட் ஷேர் வேரு. பவர் ஷேர் என்பது எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதாகும். 1999-ல் வி.சி.க தேர்தல் அரசியலில் அடியேடுத்து வைத்த போது கூறிய முழக்கம் ' ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.' நான் முதல் முதலில் நெல்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த போது கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்..எளிய மக்களுக்கும் அதிகாரம் என்று கூறினேன்.
அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதை எல்லாம் சொல்கிற துணிச்சலைப் பெற்ற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி" என்று அதில் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“