இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் படத்துக்கு காவி சட்டையையும் நெற்றியில் திருநீரும் இருப்பது போல, வடிமைத்து போஸ்டர் ஒட்டிய விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்பேத்கரிய இயக்கங்கள், தலித் இயக்கங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
அம்பேத்கரை அவமதிப்புச் செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விளம்பர நோக்கத்தோடு அம்பேத்கர் சிலைக்கு சென்னை அடையார் அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், அர்ஜுன் சம்பத் உயர்நீதிமன்றத்தில் ஒரு அனுமதி ஆணையை பெற்று வந்தார். அந்த ஆணையில் மத சாயம், மத கோஷங்கள் போன்று மத சம்பந்தமான எதுவும் அடையாளப்படுத்தி செல்லக்கூடாது, பேசக்கூடாது என்பதாகவும் மாலை 5.45-6.00 மணிவரை மட்டுமே சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அர்ஜுன் சம்பத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு வந்து மாலை அணிவிக்க வந்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசுவை போலீசார் கீழே தள்ளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலரை போலீசார் தாக்கியதாகவும் தகவல் வெளியானது. இந்த போராட்டத்தில், வன்னி அரசு, பாலசிங்கம் உள்ளிட்ட வி.சி.க தலைவர்கள் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க-வுடன் கூட்டணியில் உள்ள கட்சியான வி.சி.க-வின் பொதுச் செயலாளரை காவல்துறையினர் தாக்கியிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வன்னி அரசு, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் ஆளும் கட்சியில் கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரிந்தே, காவல்துறையில் உள்ள காவிகள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் எங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்து மதம் சாதிக் கொடுமைகள் நிறைந்த சாக்கடையாக உள்ளது என்பதால்தான், அம்பேத்கர் நான் இந்துவாக பிறந்தேன். ஆனால், இந்துவாக சாகமாட்டேன் என்று கூறி 10 லட்சம் மக்களுடன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறினார். அப்படிப் பட்ட தலைவருக்கு, காவி உடையும் திருநீரும் அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். அம்பேத்கரை அவமதிக்கும் எண்ணத்துடன் யாரும், அம்பேத்கர் சிலையை நெருங்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
மேலும், போராட்டத்தின்போது, தான் அங்கே இருந்த டி.சி.பி-யிடம் பேசுவதற்காக சென்றேன். ஆனால், போலீசார் கீழே தள்ளிவிட்டனர். சிலர் மீது போலீசார் தாக்குதல் நடத்தி யுள்ளனர். அதை முழுமையாகக் கூற நான் விரும்பவில்லை. இந்த தாக்குதலுக்கு அங்கே இருந்த டி.சி.பி திஷா மிட்டல்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளர்.
இதைத் தொடர்ந்து, வி.சி.க பொதுச் செயலாளர் வன்னி அரசுவின் ட்விட்டர் கணக்கு சட்டம் பிரச்னை காரணமாக முடக்கப்பட்டது.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில், வன்னி அரசு போலிசாரால் கீழே தள்ளப்பட்டது குறித்து, ஷாலின் மரியா லாரென்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அதிமுக ஆட்சியில் ஒரு சிறு விஷயம் என்றால் கூட அத்தனை குரல்கள் எழும் . ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆளுக்காக கூட்டணி கட்சியை சேர்ந்த தலித் தலைவரை தமிழக போலீஸ் இவ்வளவு அபாயகரமாக கீழே தள்ளியது பற்றி பலர் வாயை திறக்க வில்லை…” என்று ஷாலின் மரியா லாரென்ஸ் சுட்டிக் காட்டி இருந்தார்.
மேலும், வன்னி அரசுவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறித்து ஷாலின் மரியா லாரென்ஸ் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது முகநூல் பக்கத்தில், “மணி காலை ஆறாகிவிட்டது. இன்னும் ஒரு காஃபி கிடைக்கவில்லை. இது மிகவும் தவறான முன்னுதாரணம் விடியல் அரசே..” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், கோபம் அடைந்த ஷாலின் மரியா லாரென்ஸ், மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகத்தில் தனது நூல்கள் அச்சிட வேண்டாம் என்று கூறி மனுஷ்யபுத்திரனுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய செய்தியை, “காலையில் பகிர்ந்த ஸ்க்ரீன் ஷாட்டிற்காக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விடியல் அரசிடம் ஒரு காஃபி கேட்டது ஒரு குற்றமா ?” என்று கேட்டு பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, வன்னி அரசு, தனது ட்விட்டர் கணக்கு தனது தனிப்பட்ட முயற்சியால் மீட்கப்பட்டது என்பதை தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில், “வன்னி அரசுவிடம் சற்று முன் பேசினேன். தனது ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடக் கூறினார். ஒன்றிய அரசு தொடர்பாக தான் முன்வைத்த சில விமர்சனங்களை காரணம் காட்டி ட்விட்டர் தனக்கு அளித்த விளக்கத்தையும் கூறினார். ஒரு குறைந்த பட்ச சரிபார்த்தல்கள்கூட இல்லாமல் அவதூறு பரப்புபவர்களின் நோக்கம்தான் என்ன? கூச்சமாக இருக்காதா?” என்று கேட்டுள்ளார்.
ஆனால், ஒரு ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவரை போலீஸ் தாக்கியுள்ளது. அதை கண்டிக்காமல் தி.மு.க-வுக்கு வக்காலத்து வாங்குகிறார் மனுஷ்யபுத்திரன் என்று சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.