வரும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும், பாஜக வலுப்பெறுவதை திமுக கூட்டணியால் தான் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைக் கட்சிகள், விழுப்புரம் (தனி) தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரம் (தனி) தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
2001 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று திருமாவளவன் வெற்றி பெற்றார். அதன் பின், 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் , 2011 சட்டமன்றத் தேர்தல் ,2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் விடுதலை சிறுத்தைக் கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் இடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் தனித்துவ அடையாளம் தோய்ந்து போகும் என்ற கருத்தும் நிலவி வந்தது.
இதற்கிடையே, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தேர்தலில் தணித்து களம் காணவிருப்பதாக சீமான் இன்று அறிவித்தார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், கன்னியாகுமாரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றிய கவுன்சிலராக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தமிழக அரசியலில் தனது கணக்கைத் அக்கட்சி துவங்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil