/tamil-ie/media/media_files/uploads/2023/07/rn-ra.jpg)
வருகிற ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு ஊட்டியில் நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டு இருந்தது. மேலும், இந்த மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகையின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டணம் தெரிவித்திருந்த நிலையில், இந்த மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த துணைவேந்தர்கள் கூட்டம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. ஊடகங்களின் சில மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள் மாநில அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் அதிகாரப்போட்டி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு எந்த அதிகார மோதலும் இருதரப்புக்கும் இடையே இல்லை.
உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த துணைவேந்தர்கள் கலந்துகொள்ளும் மாநாடு கடந்த 2022 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுக்கான பணிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அதேபோல தான் தற்போதையை மாநாட்டுக்கான பணிகள் கடந்த ஜனவரி மாதமே தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது ஊட்டியில் இறுதிகட்ட மாநாட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
கற்றல், கற்பித்தல், புதுமை என கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. மாநில அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் அதிகார போராட்டமாக இதை காட்ட சிலர் முயல்கிறார். அவ்வாறான எந்த மோதலும் தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே இல்லை" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம் என்ற சட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தந்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த உள்ளார் என்ற கேள்வியை அரசியல் கட்சிகள் எழுப்பி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.