தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் வரும் : வீடியோ வெளியிட்டார் ஆலை உரிமையாளர் அனில் !

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்  தனது ட்விட்டர் பக்கத்தில்  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 ஆவது நாள்  போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள்  13 பேர் கொல்லப்பட்டனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தினால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2-வது யூனிட் விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

நாடு முழுவதும் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு லண்டன் வரையிலும்  எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.  மேலும், லண்டனில்  உள்ள தமிழர்கள் சிலர் ஆலை உரிமையாளர் வீட்டின் முன்பு  போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்  தனது ட்விட்டர் பக்கத்தில்   வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது.

ஆலையை மீண்டும் இயக்குவதற்காக நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் நெறிபிறழாமல் பின்பற்றி வருகிறோம். இதே போல், தூத்துக்குடி வாழ் மக்களின் நலனிலும் நாங்கள் முழு அக்கறையோடு இருக்கிறோம். அவர்களின் ஆசியோடு, ஸ்டெர்லைட் வர்த்தகம் தொடர்ந்து செயல்படும். சுற்றுச்சுழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலை முழு அர்பணிப்போடு உள்ளது என்பதை மீண்டும் உறுதிபட கூறிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close