ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக 98.6% தூய்மையான 4.8 டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு காலை 07:15 மணி அளவில் டேங்கர் லாரி மூலம் விநியோகத்திற்கு தயாரானது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை 2018ம் ஆண்டு போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பிறகு மூடப்பட்டது.
Advertisment
கடந்த மே 28, 2018ம் ஆண்டு முதல் மூடப்பட்ட நிலையில் இருந்தது ஸ்டெர்லைட் ஆலை. கொரோனா காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஆக்ஸிஜனை இலவசமாக உற்பத்தி செய்து வழங்க விருப்பம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது வேதாந்தா குழுமம்.
மனுவை விசாரித்த தமிழகம் மற்றும் பிற அண்டை மாநிலங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்க ஒப்புதல் அளித்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் அந்த ஆலையை கண்காணிக்க அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உட்பட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது. ஏப்ரல் 30ம் தேதி முதல் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்ஸிஜன் தயாரிக்க மே 5ம் தேதி முதல் 24 மெகாவாட் மின்சாரமும் 10 லட்சம் லிட்டர் நீரும் ஆலைக்கு வழங்கப்பட்டது. ஆலைக்குள் வேறெந்த பகுதிகளுக்கும் ஆட்கள் செல்லவில்லை என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம் கடந்த மூன்று நாட்களாக நடந்த நிலையில் இன்று காலை ஆக்ஸிஜன் விநியோகத்தை துவங்கியது ஸ்டெர்லைட் ஆலை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் ஆக்ஸிஜன் நிரம்பிய டேங்கர்களை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார் அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ். நாள் ஒன்றுக்கு இரண்டு டேங்கர் லாரிகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனுப்பப்படும் என்றும், வருகின்ற நாட்களில் உற்பத்தி அளவு அதிகரிக்கும் என்றும் வேதாந்தா நிறுவனம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil