வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூலை 2 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாயத்திற்கு நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்பட, 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.
தற்போது சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. வேடந்தாங்கலின் பரப்பை குறைக்க தடை விதிக்க கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ளார்.
தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அந்த பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசை எதிர்மனுதார்களாக சேர்க்கபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடர்ந்திருந்தால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்வோம் என தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், தனியார் மருந்து நிறுவனத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.