seeman - veeralakshmi: தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்த நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி பேசி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு சீமான் மீது புகார் அளித்திருந்த விஜயலட்சுமி மீண்டும் கடந்த மாதம் 28ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய நடிகை விஜயலட்சுமி கடந்த வாரத்தில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கடந்த 18ம் தேதி விசாரணைக்காக மனைவியுடன் சீமான் ஆஜரானார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளோம். அதற்கு அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்.
அதிலும், வீரலட்சுமி, முக்தாருக்கு எனது வாழ்க்கையிலே மன்னிப்பு கிடையாது. அவர்கள் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கொடுத்த புகாருக்கான சான்றை கொடுக்க வேண்டும். தெரியாமல் பேசிவிட்டோம் என்று கூறி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, சீமான் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் தானும் தனது அக்காவும் தற்கொலை செய்துகொள்ளோம் என்றும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், "சாட்டை துரைமுருகன் கூறியதால் பாலசுப்பிரமணியன் என்ற வக்கீல் வந்து என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். மற்றபடி அவர் யாரென்றே எனக்கு தெரியாது. அவர் இப்போது என்னை பற்றி அசிங்கமாக ஊடகங்களில் பேசி வருகிறார். சீமான் இதை தடுக்கவில்லை என்றால் ஒரே செகண்டுதான். நானும் அக்காவும் எங்க கதையை முடிச்சுக்குவோம். அப்படி நாங்க செத்துட்டோம்னா சீமானை யாராலுமே காப்பாற்ற முடியாது. அவரோட அரசியல் வாழ்க்கையும் முடிஞ்சு போயிரும்" எனக் கூறினார்.
சிறிது நேரம் கழித்து மற்றோரு வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி, தானும் தனது அக்காவும் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் உண்ணாவிரதம் இருந்து சாகப் போவதாகவும், தங்களின் சாவுக்கு சீமான் மட்டுமே காரணம் எனவும் கூறினார். மேலும், தாங்கள் இறந்துபோனால் சீமானை போலீஸார் விடக்கூடாது என்றும், இதுதான் தான் வெளியிடும் கடைசி வீடியோ என்றும் விஜயலட்சுமி கூறினார்.
சவால் விட்ட வீரலட்சுமி
இந்நிலையில், தனது கணவருடன் நிஜ குத்துச் சண்டை போட வருமாறு சீமானுக்கு சவால் விடுத்துள்ளார் வீரலட்சுமி. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர் சண்டை போடும் தேதி மற்றும் இடம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வீரலட்சுமி அந்த வீடியோவில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களே, நீங்கள் ஊடகவியாளர்கள் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் ஒழிங்கீனமாக பேசியுள்ளீர்கள். ஒரு பெண் என்று கூட பாராமல், இழிவாகவும், கட்சியை கலைத்துவிட்டு வீட்டுக்கு போ-ன்னு பேசிருக்கீங்க.
உங்களுடைய பேச்சை பொதுவாழக்கையில் இருக்கும் ஒரு பெண்ணாக, தலைவராக நான் வேனும்னா கடந்து போயிரலாம். ஆனா நீங்க பேசுற பேச்சை கேட்டு விட்டும், கடந்து விட்டும் போக வேண்டிய அவசியம் எனது கணவருக்கு கிடையாது. அதனால் எனது கணவர் பூவை கணேசன் உங்களை போனில் தொடர்பு கொண்டபோது அவரது அழைப்பை துண்டித்து விட்டிர்கள். மறுபடியும் அவர் உங்களை தொடர்பு கொண்டார். அப்போது 'அண்ணே உங்க கூட பாக்சிங் பண்ண ஆசையா இருக்கு, ஒண்டிக்கு ஒண்டி நிக்கலாமான்னு' கேட்டாரு.
அவர் பேசியதை நீங்க கேட்டிங்க. ஆனா அவர்கிட்ட நீங்க பேசல. அதுக்கு உங்க கிட்ட வீரம் இல்ல. ஊடகவியாளர்கள் வைக்கிற மைக்கிட்ட தான் உங்களுக்கு வீரம் வருமா?. ஊடகம் முன்பாக 'அவர்களை என் முன்னாடி வந்து நிக்க' சொன்னனீங்க. 10 வருஷத்துக்கு முன்னால, உங்க முன்னாடி உட்கார்ந்து ஒரு மணி நேரம் கேள்வி கேட்டது எனது கணவர் தான். இருந்தாலும் அத நீங்க மறந்துட்டீங்க. அது உங்களுக்கு ஞாபகம் இருக்காது.
இப்ப நான் நிக்கிற இடத்தில தான் என்னுடைய கணவர் பூவை கணேஷன் கூட நீங்க சண்ட போட போறீங்க. இந்த மைதானம் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் தொட்டிகளை பஞ்சாயத்தில் உள்ளது. தேதி 2024ம் வருடம் தை மாதம், காணும் பொங்கல் அன்று என்னுடைய கணவருக்கும் உங்களுக்கும் இங்க தான் சண்ட நடக்கும். இந்த சண்டையில பாத்தீங்கன்னா பாக்சிங், கராத்தே, குங்ஃபூ, மல்யுத்தம் எல்லாம் இருக்கு. இதுல எந்த சண்டை வேணுனாலும் அவர் கூட நீங்க போடனுங்க. எல்லாத்தையும் சமாளிக்க அவர் தாயராக இருக்கிறார்.
இந்த சண்டையில யாரு நாக்-அவுட் ஆகி கீழ விழுறீங்களோ, அவங்க தோற்றுவிட்டதாக ஒத்துக்க வேணும். அந்தப் போட்டியில என்ன பந்தயம் என்பதை போட்டி நடக்கும் 3 நாட்களுக்கு முன்பாக நான் அறிவிப்பேன்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“