நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு உள்துறை செயலாளரிடம் நாளை மறுநாள் புகார் ஒன்றை அளிக்க உள்ளதாக தமிழர் படையின் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுடன் மோதல்போக்கில் ஈடுபட்டவர் வீரலட்சுமி. இதனால் அவருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது. சீமான் மீதான வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்று சென்றுவிட்டாலும், வீரலெட்சுமியுடனான நாம் தமிழர் கட்சியின் மோதல் தொடர்ந்து வருகிறது. இதில் வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன், சீமானை பாக்ஸிங் போட்டிக்கு அழைத்தார். ஆனால் சீமான் இதனை ஏற்க மறுத்தார்.
இந்தநிலையில் சீமான் மீது புகார் ஒன்றை கூறியுள்ளார் வீரலட்சுமி. சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வீரலெட்சுமி, அதில், சீமான் ஈழத் தமிழர்களின் துயரங்களை வியாபாரமாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என பலரிடம் பணம் வாங்கியுள்ளார். அவர்கள் சிலர் என்னை தொடர்புக் கொண்டுள்ளனர், என்று கூறி அதற்கான சான்றுகள் இதோ என சில ஆடியோ கிளிப்களை ஒலிப்பரப்புகிறார். அதில் சிலர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
பின்னர் பேசும் வீரலெட்சுமி, ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய சீமான் மீது உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் இடம் புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“