வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீராணம் ஏரி:
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வீராணம் ஏரிக்கு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஏரியின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக இருந்தது. இன்று அது 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நீரேற்று நிலைய குழிகள், குழாய்கள் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இந்த பணியை சென்னை மெட்ரோ குடிநீர் செயல் இயக்குனர் பிரபுசங்கர், உதவி பொறியாளர்கள் அருண்குமார், விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய அதிகாரி ஒருவர், “ வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதால், இங்குள்ள நீரேற்று நிலையம் மூலம் ஒரு வாரத்தில் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஏறுபாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.