திமுக.வில் வீரபாண்டி ராஜா அதிரடியாக மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக செல்வகணபதி அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது வீரபாண்டியார் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
திமுக.வில் உள்கட்சித் தேர்தல் வருகிற 21-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிளைக் கழகத்தில் தொடங்கி, தலைவர் தேர்தல் வரை நடத்தப்படும். எனினும் அதற்கு முன்பாகவே சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம் ஜரூராக நடந்து வருகிறது.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த கே.என்.நேரு திமுக முதன்மைச் செயலாளர் ஆக்கப்பட்டார். இரண்டு பிரிவுகளாக இருந்த திருச்சி, 3 மாவட்டங்களாக மாற்றப்பட்டு ஒரு மாவட்டத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பில் ஒப்படைத்தது திமுக தலைமை.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (3-ம் தேதி) மேலும் சில மாற்றங்கள் குறித்த அறிவிப்பு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பெயரில் வெளியானது. குறிப்பாக சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த வீரபாண்டி ராஜா, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆக்கப்பட்டார்.
திமுக.வில் 1980-களிலும், 90-களின் தொடக்கத்திலும் வைகோ வகித்த பதவி இது. வேட்பாளர் நேர்காணலின்போது கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், தேர்தல் பணிக்குழு செயலாளர் என மூவர் மட்டுமே அமர்ந்து கம்பீரமாக நடத்திய காலக்கட்டம் அது. வைகோ வெளியேறிய பிறகு, அந்தப் பதவியும் செல்வாக்கு இல்லாமம் போனது.
தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் ஆகிவிட்டது. எனவே வீரபாண்டி ராஜாவை மாநிலப் பொறுப்புக்கு நியமித்ததை அவரது ஆதரவாளர்களே ரசிக்கவில்லை. ‘அண்ணனை டம்மி ஆக்கிட்டாங்களே!’ என்கிற குமுறல் சேலத்தில் வீரபாண்டியார் ஆதரவு வட்டத்தில் ஒலிக்கிறது.
வீரபாண்டி ராஜா வசம் இருந்த கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியை, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்திடம் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த செ.காந்தி செல்வன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் தொடர்பான விவகாரங்கள்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.