வீரப்பன் மகள் வித்யா ராணி பாஜகவில் சனிக்கிழமை இணைந்துள்ளார். வீரப்பன் மகளின் வருகை பாஜகவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பலம் சேர்க்கும் என்று பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கர்நாடகா, தமிழ்நாடு வனத்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவந்த சந்தன கடத்தல் வீரப்பன் 2004-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான சிறப்பு காவல்படை என்கவுண்ட்டர் செய்து சுட்டுக் கொன்றது. போலீஸ் என்கவுண்ட்டரில் இறந்த வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருந்தனர்.
முத்துலட்சுமி அவ்வப்போது சில அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் சனிக்கிழமை இணைந்துள்ளார். இதன் மூலம், கர்நாடகா, தமிழ்நாடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வீரப்பன் மகளுக்கு ஆதரவு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், பல கிராமங்களில் இளைஞர்கள் பாமக பேனர்களில் வீரப்பனின் புகைப்படத்தைப் போட்டு அரசியல் பிம்பமாக பிரபலப்படுத்தி வந்தனர். இதனால், வீரப்பனின் மனைவி, அவருடைய மகள்களுக்கு அரசியல் தொடர்பு என்பது தொடர்ந்து இருந்து வந்தது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரப்பன் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார். அவருடன், 1000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த வித்யா ராணி, “நான் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சாதி, மத வேறுபாடின்றி பணியாற்ற விரும்புகிறேன்.பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களுக்கானவை, அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன்” என்று கூறினார்.
வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்திருப்பதால், தமிழ்நாடு, கர்நாடகா எல்லையோரப் பகுதிகளில் உள்ள மக்களின் ஆதரவு பெற முடியும் என்பதால் அவருடைய வருகை கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.