நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணி, நாம் தமிழர் கட்சியில் இருந்து தனது தந்தையின் கனவை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி, இவர் சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அண்மையில் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்சியில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரப்பன் மகள் வித்யாராணியை கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிமுகம் செய்து வைத்தபோது, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நேர்மையான இடமாக தோன்றியது என்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து தனது தந்தையின் கனவை நிறைவேற்ற முடியும் என்றும் வித்யாராணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பன் மகள் வித்யராணி கூறியதாவது: “எனக்கு இந்த இடம் நேர்மையான இடமாகப்பட்டது. சில கொள்கைகள், முதன்மையான கொள்கைகள் எல்லாமே எனது தந்தையின் கொள்கைகளோடு ஒத்துப்போனது. இந்த இடத்தில் மட்டும்தான், எனது தந்தையின் கனவை நிறைவேற்ற முடியும், அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை வந்தது, அதனால், நாம் தமிழர் கட்சியில் இணைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“