பறக்கும் ரயில் விரிவாக்கம்: கன்னியாகுமரி-டெல்லி ராஜஸ்தானி:
சென்னையில் புறநகர் ரயில் சேவை உடன் பறக்கும் ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, 20 கி.மீ தூரத்திற்கு 18 ரயில் நிலையங்கள் உடன் சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கிண்டி, மாம்பலம், தாம்பரம் பகுதியில் தினசரி வேலைக்கு செல்வோர் சென்னை கடற்கரை வரை சென்று சுற்றி வர வேண்டிய அவசியம் இல்லை.
பின்னர், மவுண்ட் வரையிலான ரயில் சேவை நீட்டிப்பு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் வேளச்சேரி- செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், புனித தாமஸ் மலை என மூன்று ரயில் நிலையங்கள் வர உள்ளன.
இதற்கிடையில், ஆதம்பாக்கம் அருகே சென்னை மெட்ரோ 5ஆவது வழித்தடமும் வர உள்ளது. மேலும், இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என மூன்று விதமான ரயில் சேவைகளை வழங்கும் நிலையமாக புனித தாமஸ் மவுண்ட் மாற உள்ளது.
தொடர்ந்து, வேளச்சேரியில் இருந்து வரும் MRTS ரயில் பாதையை மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் மட்டும் பாக்கியுள்ளன.
அதுவும் அடுத்த 8 மாதத்தில் சாத்தியமாகிவிடும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் கூறுகையில், “இந்தத் திட்டம் வரவேற்புக்குரியது. மற்ற முக்கிய இடங்களிலும் இதுபோன்று திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கேரள மாநிலத்தை பொறுத்தவரை அங்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ரயில்வே வளர்ச்சி துறை பொறுப்பையும் கவனிப்பார்.
அதுபோல் தமிழ்நாட்டிலும் ரயில்வே வளர்ச்சி அமைச்சர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அதனை தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கவனித்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“