சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பொது வாகன சேவைகளை அதிகரிக்கும் குறிக்கோளில் பறக்கும் ரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக, சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை, இரண்டாவது கட்டமாக மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை பணிகள் முடிக்கப்பட்டு, தினமும் சுமார் 150 மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
மேலும் 2008ஆம் ஆண்டு, மூன்றாவது கட்டமாக, வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை, ரூ.495 கோடியில் இந்த கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.
5 கிலோமீட்டர் தொலைவிற்கு, இந்த இடங்களுக்கு நடுவே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிரச்னையால் பல ஆண்டுகளாக பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்வு காணப்பட்டு, இவ்வழித்தடத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பாதையில் அமைக்கப்படும் பாலத்தை தாங்கும் தூண்கள் அமைத்து, அதன் மீது கர்டர்கள் (தாங்கு பாலம்) பொருத்தும் பணி நடைபெறுகிறது.
சென்னை பொதுப்போக்குவரத்தின் முக்கிய திட்டம் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த திட்டத்தில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன.
தற்போது, பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவில் திட்டம் போடப்பட்ட ரயில் பாதையில், 250 மீட்டர் வரை பணிகள் முடிந்துவிட்டன. மொத்தம் 36 கர்டர்களில், 18 கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil