/indian-express-tamil/media/media_files/2025/09/08/velankanni-festival-2025-09-08-11-41-11.jpg)
வேளாங்கண்ணி தேர்பவனி கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, 'மரியே வாழ்க', 'ஆவே மரியா' என கோஷமிட்டு வழிபட்டனர்.
தேர் பவனி
ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுப் பெருவிழாவில், தினசரி சிறப்புப் பிரார்த்தனைகள், நவநாள் திருப்பலி, மற்றும் மாதா மன்றாட்டு ஆகியவை நடைபெற்றன. நேற்று மாலை புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரை அவர் புனிதம் செய்தார்.
அதற்குப் பிறகு, புனித ஆரோக்கிய அன்னை பெரிய தேரில் எழுந்தருளினார். அவருக்கு முன்னால் மிக்சேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோனியார், சூசையப்பர் மற்றும் உத்திரிய மாதா ஆகியோர் 6 சிறிய தேர்களில் எழுந்தருளினர். பின்னர், லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ, பெரிய தேரும், சிறிய தேர்களும் கடற்கரை சாலை மற்றும் ஆரியநாட்டு தெரு வழியாக வலம் வந்து மீண்டும் பேராலயத்தை அடைந்தன. இந்த பவனியின்போது, பக்தர்கள் 'மரியே வாழ்க', 'ஆவே மரியா' என விண்ணதிர கோஷமிட்டனர். இந்த விழாவில், பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், மற்றும் பல பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
விழா நிறைவு
இன்று காலை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் அன்னையின் பிறப்பு விழா விண்மீன் ஆலயத்தில் நடைபெற்றது. மாலை கொடி இறக்கப்பட்டு, இந்தப் பெருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.