நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். இந்த ஆலயத்திற்கு தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநில, நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்வர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம். இந்நிலையில்,
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளையொட்டி
பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் 10 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
மாதாவின் பிறந்த நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, தேர் பவனி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி செப்டம்பர் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் இன்றே குவித்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 2,500க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், வேளாங்கண்ணிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“