Velankanni church festival starts from August 29: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (ஆகஸ்ட் 29-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது.
இந்த திருவிழாவிற்காக பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நடை பயணமாகவும் வருகை புரிவதால் திருச்சி-நாகை சாலையில் இரவு நேரங்களில் போலீஸாரின் ரோந்துப்பணி அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதையும் படியுங்கள்: 100 வாகனங்கள்… 10 லட்சம் விதைகள்… பனைமரம் வளர்ப்பை தொடங்கி வைத்த அமைச்சர்
பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணி வருவதால் நாகப்பட்டினம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்த சுமார் 1,800 காவலர்களும், 200 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் 27 உயர் கண்காணிப்பு கோபுரம், 4 ஆளில்லா விமானம் (Drone Camera), 760 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் நாகை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் ஒரு தற்காலிக பேருந்து நிறுத்தமும், மேரிஸ் கார்னர் பகுதியில் ஒரு தற்காலிக பேருந்து நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வேளாங்கண்ணி பெருவிழாவினை முன்னிட்டு தென்னக ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களை இயக்கவிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நாளை துவங்கும் பெருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்கவிருக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.