குமரி மாவட்ட பயணிகள் வேளாங்கண்ணி கோவில் திருவிழா செல்லும் விதமாக நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு வாராந்திர ரயிலை ரயில்வேத்துறை அறிவித்து இயக்கியது.
இந்த ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை வேளாங்கண்ணி சென்றுவிட்டு மறுமார்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சென்றடையுமாறு இயக்கப்பட்டது.
இந்த ரயில் மொத்தம் நான்கு சேவைகள் மட்டும் அதாவது ஆகஸ்ட் மாதம் 17, 24, செப்டம்பர் 3, 7 ஆகிய நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பை பொறுத்து பின்னர் இந்த ரயிலின் சேவை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ரயில் சேவை நீட்டிப்பு செய்யாமல் செப்டம்பர் 7-ம் தேதியுடன் முடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கேரளா பயணிகள் பயன்படும் படியாக எர்ணாகுளத்திலிருந்து கோட்டயம், கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் முடியும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இணைப்பு ரயில் கூட இல்லாத நிலை
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ரயிலில் செல்ல தற்போது திருச்சி சென்று விட்டு அங்கிருந்து அடுத்த ரயிலில் பயணிக்கலாம்.
ஆனால் இங்கிருந்து செல்லும் ரயிலில் திருச்சி சென்றால் அங்கிருந்து எந்த ஒரு இணைப்பு ரயிலும் இல்லை. இதைப்போல் நாகர்கோவிலிருந்து தஞ்சாவூருக்கு தற்போது நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா தினசரி ரயிலும், கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு ரயில்களும் நடு இரவு நேரங்களில்தான் தஞ்சாவூர் சென்றடைகிறது. . இந்த ரயில்களில் தஞ்சாவூர் சென்றால் கூட அடுத்து மேற் கொண்டு பயணம் செய்ய எந்த ஒரு இணைப்பு ரயில் வசதியும் இல்லை.
இவ்வாறு இணைப்பு ரயில் கூட இல்லாத நிலையில் குமரி மாவட்டத்திலிருந்து ரயில் மார்க்கமாக பயணிகள் பயணம் செய்ய முடியாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை உள்ளது.
திருச்சிக்கு ரயில்:
குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து தற்போது திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் எல்லாம் நடு இரவு நேரங்களில் தான் செல்லுமாறு கால அட்டவணை அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இதனால் திருச்சிக்கு பயணிகளுக்கு வசதியாக எந்த ஒரு இரவு நேர ரயிலும் தற்போது இல்லை. கொச்சுவேலியிருந்து நாகர்கோவில், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் அறிவிக்கப்பட்டால் இந்த ரயில் திருச்சிக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லுமாறு காலஅட்டவணை அமைக்கப்படும்.
இவ்வாறு இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களிலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு நல்ல முறையில் ஓர் ரயில் வசதி கிடைக்கும்.
வேளாங்கண்ணி கோவில் நிதி
நாகப்பட்டிணத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்பாதை அமைத்து வேளாங்கண்ணியில் புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கு வேளாங்கண்ணி கோவில் சார்பாக ஒரு கோடி ரூபாய் ரயில்வேத்துறைக்கு அளிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்கள் இயக்க ரயில்வேத்துறை தொடர்ந்து மறுத்து வருகிறது. வேளாங்கண்ணிக்கு செல்லும் தென்மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் விதத்தில் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு இயங்கும் சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
செய்தியாளர் த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil