மதுரையில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுண்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தன் மகன் முருகன் கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரை மாநகர காவல் உதவி ஆணையாளராக இருந்த வெள்ளத்துரை மற்றும் உதவி ஆய்வாளர் தென்னவன் மற்றும் ஏட்டு கணேசன் ஆகியோர் சேர்ந்து சுட்டுக்கொலை செய்தாகவும், இது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் வெள்ளத்துரை (கூடுதல் டி.எஸ்.பி ஆக இருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டார்) மற்றும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணையை விசாரணை சி.பி.சி.ஐ.டியில் இருந்து சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் அந்த மனுவில் குருவம்மாள் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் சில வாதங்கள் வைக்கப்பட்டது. அதாவது மனுதாரரின் மகன் உட்பட தேடப்பட்டு வந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரை நோக்கி அவர்கள் அரிவாளால் தாக்க முயன்ற போது தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் மகன் முருகன் மீது 25 வழக்குகளும் அவரது கூட்டாளி கவியரசன் மீது 75 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் மகன் இறந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையக் குழு விசாரணையில் உதவி கமிஷனர் வெள்ளத்துரை மட்டும் 10 என்கவுண்டர்களில் ஈடுபட்டுள்ளார் என்று இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த அதிகாரி தற்காப்புக்காக மீண்டும் மீண்டும் என்கவுண்டர்களில் ஈடுபட்டாரா அல்லது யாரோடு தூண்டுதலின் பேரில் இதுபோன்று நடந்து கொண்டாரா என்பதை விசாரணை செய்ய வேண்டும்.
இத்தகைய விவகாரங்களில் முழுமையான விசாரணை நடத்துவது அவசியம். தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்கும் ஒரு அமைப்பாக உள்ளது. இருந்தபோதிலும் போலீசாரை தாக்க முயலும் ஆபத்தான குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பின்னர் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது அல்லது காயம் அடைவது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீஸிடம் இருந்து தப்பிக்க முயற்சிப்பதும் பிறகு கீழே விழுந்து கை கால்களை உடைத்துக் கொள்வதும் விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் பிற்போக்கான சிந்தனையாக இருக்கிறது. ஆனால் இதை உணராமல் பாராட்டுகிறார்கள், உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை ஒரு மாயை. அது உண்மையானது இல்லை. என்கவுண்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் மனுதாரர் மகன் இறந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் உயர் அதிகாரி ஒருவரை தமிழக காவல் டிஜிபியாக நியமித்து மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“