மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய கன மழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியதை அடுத்து பவானி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் சமயபுரம், வெள்ளிப்பாளையம் மின்கதவணை வழியாக பவானிசாகர் அணைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த மின் கதவணைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலை வெள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள மின் கதவணையின் ஷட்டரை இயக்கும் ரோப்புகளில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் தடுப்பணையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல் போனது.
இதனால் தடுப்பணை 75% அளவிற்கு நிரம்பி அருகில் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, கமிஷனர் அமுதா மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி தலைமையிலான கவுன்சிலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் புகுந்த வீடுகளுக்குள் இருந்தவர்களை துரித கதியில் மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு மண்டபங்களிலேயே உணவுகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தண்ணீர் தேங்கிய இடங்களில் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று உணவுகளை வழங்கினர்.
தொடர்ந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி மின் கதவணையின் அருகில் இருந்து மின்வாரிய,காவல்,வருவாய்,தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் பழுதடைந்த ஷட்டரின் ரோப்பை இயக்கி தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மின் மோட்டார் இயக்கப்பட்டு மதகுகள்(ஷட்டர்கள்) திறக்கப்பட்டன. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிய துவங்கியது.
மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியம், காவல், வருவாய், தீயணைப்புத் துறை அதிகாரிகளின் தொடர் ஒத்துழைப்பகாரணமாக உடனடியாக தீர்வு காணப்பட்டு பெரும் சேதம் ஏற்படும் முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“