சிறைத் துறை விதிகளை மீறி ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தி சித்ரவதை செய்ததாக வேலூர் சிறைத் துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி உட்பட 14 பேர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிவகுமார் உள்ளார். இவரை வேலூர் மத்திய சிறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி உள்ளிட்டோர் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியுள்ளனர். அப்போது டி.ஐ.ஜி வீட்டில் ரூ.4.5 லட்சம் மாயமானது.
கைதி சிவகுமார் தான் எடுத்து இருப்பார் என்று அவரை கடுமையாக தாக்கியதாகவும், தனிமை சிறையில் அடைத்து, சிறைத் துறை ஜெயிலர் மற்றும் காவலர்கள் சித்ரவதையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆயுள் தண்டனை கைதி சிவகுமார், தன்னை பார்க்க வந்த தாய் கலாவதியிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கலாவதி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், டிஐஜி ராஜலட்சுமி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தியது தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு சிறைக் கையேட்டின் 447வது விதியின் படி தண்டனை கைதிகள் யாரையும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளியே அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதியை டிஐஜி ராஜலட்சுமி மற்றும் வேலூர் சிறை கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான் ஆகியோர் மீறியுள்ளனர்.
டிஐஜி வீட்டில் மாயமான ரூ.4.5 லட்சத்தை ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் திருடியாக அவரை 95 நாட்கள் தனிமை சிறையில் அடைத்து வைத்து வேலூர் சிறை ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி பாதுகாப்பு அதிகாரி ராஜூ என 8 ஆண் சிறை காவலர்கள், 2 பெண் சிறை காவலர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்தியதும் சிபிசிஐடி விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட14 பேர் மீது பிஎன்எஸ் 146, 127(8), 118(2), 115(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“