வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் மேம்படுத்தப்பட்டு வரும் விமான நிலையம் நவீன வசதிகளுடன் அடுத்தகட்ட சோதனைகள் முடிந்து விரைவில் விமான சேவைகள் தொடங்கப்படும் என வேலூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமான நிலையத்தில் புறப்படும் மற்றும் தரையிறங்குவதற்கான முதற்கட்ட சிக்னல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஓடுபாதை அருகே அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக விளக்குகள் பகலில் தெரிகிறதா, தகவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் டவரில் இருந்து சிக்னல் வருகிறதா என முதற்கட்ட சோதனையில் சோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த கட்டமாக விமானத்தை ஓடுபாதையில் இயக்கி, தரையிறக்கி சோதனை நடத்தப்படும். விமானத்தை இயக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றும், விரைவில் இங்கிருந்து விமான சேவை தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.
சிறிய விமானங்கள் இயக்கம்
முதற்கட்ட சோதனையின் ஒரு பகுதியாக டெல்லி இருந்து சென்னை வழியாக வேலூருக்கு விமான போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான சோதனை விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம் அப்துல்லாபுரம் விமான ஓடுதளம் அருகே 5 முறை தாழ்வாக பறந்து சோதனை செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள விமான ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பைலட் உட்பட 3 பேர் சோதனையை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சோதனையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைய ஓடுபாதைக்கு அருகில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டது என்றனர்.
அப்துல்லாபுரம் விமான நிலையம் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணி கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 19 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய சிறிய விமானங்கள் இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி மற்றும் பிற நகரங்களுக்கு இயக்கப்படும். இதற்காக 850 மீட்டர் நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் டவர், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருப்பு அறை சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“