Vellore By Election: பணப்பட்டுவாடா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களின் பிரசாரத்தால் அனல் பறக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதும், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியை விமர்சிப்பதும் என ஒரு விமர்சனப் பிரசாரப் போரே நடந்து வருகிறது.
வேலூர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தலின் போது திமுகவைச் சேர்ந்த துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் பெரிய அளவில் பணம் கைப்பற்றினர். அந்த பணம் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்ததாக கூறி வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார். ஆனால், தமிழகத்தில், அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தேனியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் முன்பு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட, திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
வேலூர் தொகுதியில் திமுக – அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்று உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் தனது உறுப்பினரின் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதே போல, திமுக வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்வதோடு அதிமுகவின் தோல்வியை மீண்டும் ஒருமுறை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதனால், திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வேலூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.
தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி திமுக மீதும் மு.க.ஸ்டாலின் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். வாணியம்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், யாரால் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும் என்று கூறினார். திமுக பொய் பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சரின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மு.க.ஸ்டாலின் அதே வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்து பேசுகையில், “வேலூர் தொகுதி தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்திருக்க வேண்டியது. சிலர் திட்டமிட்டு சதி செய்து திமுக-விற்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ரெய்டு நாடகம் நடத்தி தமிழக மக்களை நம்ப வைக்க முயன்றனர். ஆனால், தேர்தல் நடந்தபோது மக்கள் நம்பவில்லை. மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையால் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.” என்று கூறினார்.
மேலும், “நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றியதாகவும் அ.தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். அவர்கள் தேனியில் அல்வா கொடுத்தல்லவா வெற்றி பெற்றார்கள்” என்று முதலமைச்சர் பழனிசாமியின் விவர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.
இப்படி தேர்தலில் மு.க.ஸ்டாலினும் பழனிசாமியும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களை வீசும் பிரசார யுக்தியை கைக்கொண்டுள்ளனர். இதனால் பிரசார களத்தின் உஷ்ணம் சற்று கூடியிருந்தது என்றே கூறலாம்.
அதே போல, மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்துடன் நடந்து சென்று மக்களுடன் மக்களாக டீ கடையில் டீ குடித்துவிட்டு வாக்கு சேகரித்தார். திண்ணை பிரசாரம் செய்தார்.
மு.க.ஸ்டாலினும் பழனிசாமியும் பிரசாரத்தில் விமர்சனங்களைத் தாண்டி தொகுதிக்கு என்னவெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.
இந்த பிரசாரத்தில், மற்றொரு குறிப்பிட வேண்டிய செய்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குறிப்பிடவில்லை. அதே போல, அதிமுகவில் முதலமைச்சர் பழனிசாமி பாஜகவில் பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசவில்லை என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அவர்களின் பெயரைச் சொல்வதால் எந்த லாபமும் இல்லை என்பதால் இருவருமே தவிர்த்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இருவருடைய தேர்தல் பிரசாரமும் பொதுமக்களின் கவனத்தை கவர்ந்திருந்தாலும், பொதுத்தேர்தலுக்கு பிறகு இரண்டு கட்சிகளின் நடவடிக்கைகளும் வேலூர் தொகுதியில் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
வேலூர் தொகுதியில், இஸ்லாமியர்களின் வாக்குகள் கனிசமான அளவில் உள்ளன. இந்த வாக்குகளை பெறுவதில் இரண்டு கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன.
அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு முகமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன. எதிர்த்து 6 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். இந்த சட்டம் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், அதன் அதிகாரத்தை பரவலாக்கும் சட்டத்துக்கு இரு கட்சிகளும் ஆதரவு அளித்தது இஸ்லாமிய தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட, முத்தலாக் தடை சட்டத்துக்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிமுக சார்பில் மாநிலங்களவையில் அன்வர் ராஜா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி தொகுதி அதிமுக எம்.பி-யுமான ரவிந்திரநாத் குமார் முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்து பேசினார். இது அதிமுகவில் மட்டுமில்லாமல் இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். கட்சியின் ஒரே லோக்சபா எம்.பி.யான ரவீந்திரநாத் குமாரை வேலூர் பிரசாரத்தில் கட்சி தவிர்க்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். திமுகவில் துரைமுருகன் தனது மகன் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கட்சியின் முக்கிய தலைவர்களை பிரசாரத்துக்கு அழைத்துள்ளார்.
இதெல்லாம் ஒரு புறமிருக்க தேர்தல் பிரசாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் பழனிசாமியும் ஒருவருக்கொருவர் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்து செய்யும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பது வாக்குப்பதிவு அன்றுதான் தெரியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.