வேலூர் மத்திய சிறை கைதிகளுக்கு ஊதியம் தருவதில் சிக்கல். மத்திய சிறைச்சாலைகளில் இருந்து உற்பத்தி பொருட்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது அரசாங்கம்.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 61 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டிக் கொடுத்திருக்கிறது மத்திய சிறைச்சாலைகள்.
வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆவார்கள். அவர்களில் 87 நபர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அணியும் காலணிகள் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏனைய நபர்கள் புத்தகம் பைண்டிங் செய்வது, துணி நெய்வது, மற்றும் இதர தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஸ்கில்டு லேபர்களுக்கு 200 ரூபாயும், செமி ஸ்கில்டு லேபர்களுக்கு 180 ரூபாயும், அன்ஸ்கில்ட் லேபர்களுக்கு 160 ரூபாயும் நாளொன்றுக்கு சம்பளமாக வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
ஆனால் சிறைத்துறைக்கு போதுமான நிதி வழங்கப்படாத காரணத்தால் இவர்களுக்கு 6 மாதம் வரை சம்பளம் வழங்கப்படவில்லை.
இவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம், இவர்கள் செய்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். மீதம் உள்ள தொகை கைதியின் வங்கி கணக்கிற்கோ அல்லது அவர்களின் வீட்டு உறுப்பினர்களுக்கோ அனுப்பிவைப்பார்கள்.
வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ஸ்கில்ட் லேபர்கள் 87 பேருக்கும் தலா 45,000 ரூபாய் சம்பளப் பணம் தரப்படாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, வேலூர் சிறை டெப்யூட்டி இன்ஸ்பெக்டர் கே. ஜெயபாரதி சம்பள பாக்கி இருப்பதை ஏற்றுக் கொண்டார்.