Advertisment

வேலூர் சிறையில் இஸ்லாமிய கைதிகள் வழிபட அனுமதி மறுப்பு? விஷமத்தனமான குற்றச்சாட்டு- சிறை நிர்வாகம் விளக்கம்

ஒவ்வொரு ஆண்டும் புனித ரம்ஜான் மாதத்தில் வேலூர் மத்திய சிறை, உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து முஸ்லீம் சிறைவாசியினரும் நோன்பு கடைப்பிடிக்கவும் தொழுகை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

author-image
WebDesk
New Update
Vellore jail

Vellore jail

வேலூர் மத்திய சிறைக்குள், இஸ்லாமிய கைதிகளுக்கு வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக, எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

Advertisment

கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறைவாசிகளிடையே வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதால், சிறைச் சாலைகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்த விடியா தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பும், கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகும் ஏதோவொரு காரணத்தால் சிறைகளில் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வேலூர் மத்தியச் சிறைச்சாலைக்குள் 3 வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அதில், இரண்டு மதங்களுக்கான வழிபாட்டுத் தலங்களை வழிபட அனுமதித்திருக்கும் சிறை நிர்வாகம், இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்காமல் மூடிவைத்துள்ளது. இதனால், இஸ்லாமிய சிறைவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர், என்று பழனிசாமி கூறியிருந்தார்..

இதுதொடர்பாக பதிலளித்த சிறை நிர்வாகம், வேலுார் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வேலூர் மத்திய சிறை உட்பட தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் எவ்வித சிரமுமின்றி தங்கள் மத வழிபாட்டைத் தொடரும் வகையில் சமமான மத வழிப்பாட்டு உரிமையைப் பெற்றுள்ளனர்.

சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் சிறை விதிகளின்படி ஏற்கனவே நடைமுறையிலுள்ள வழக்கத்தின் படியும் எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக இயங்கி வருகின்றன. சிறை வளாகங்களில் அமைந்துள்ள இவ்வழிபாட்டுத் தலங்களுக்குச் சிறைவாசிகள் சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நடைமுறை மத்திய சிறை வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து சிறைகளிலும் பின்பற்றப்படுகிறது.

நடப்பாண்டு உட்பட ஒவ்வொரு ஆண்டும் புனித ரம்ஜான் மாதத்தில் வேலூர் மத்திய சிறை, உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து முஸ்லீம் சிறைவாசியினரும் தங்கள் தொகுதிகளில் நோன்பு கடைப்பிடிக்கவும் தொழுகை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண்.286(6)-ன் படி ரமலான் காலத்தில், நோன்பிருக்கும் முஸ்லீம் சிறைவாசிகள் தங்களுக்கான உணவைத் தனியாகச் சமைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், தொழுகையின் போது தேவைப்படும் பாய்கள் மற்றும் தண்ணீர் போன்றவை தேவையான அளவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இருப்பினும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983, விதி எண்.286(4)-ன் படி பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளானாலும் மதவழிபாடு அல்லது மதச்சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் பெரிய அளவில் கூட்டம் கூடுவது அனுமதிக்கப்படுவதில்லை.

ஆகவே, அனைத்து மதத்தைச் சார்ந்த சிறைவாசிகளும் தங்களது மத வழிபாடு மற்றும் மதச் சடங்குகளை நிறைவேற்றிட சிறைத்துறையின் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் சிறை விதிகளுக்குட்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே, சிறைவாசிகள் சமய உரிமைகள் மீறப்படுவதாகச் செய்தி ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்ற விஷமத்தனமான ஒன்று என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment