வேலூர் சிஎம்சி கல்லூரி ராகிங் வீடியோ.. ஏழு சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
விடுதியில் தங்கிப் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை, கடந்த மாதம் 9 ஆம் தேதி, சில சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தில் ஓடச் சொல்லி ராகிங் செய்துள்ளனர்.
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், ராகிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
Advertisment
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் சமீபத்தில் தொடங்கியது. இதில், விடுதியில் தங்கிப் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை, கடந்த மாதம் 9 ஆம் தேதி, சில சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தில் ஓடச் சொல்லி ராகிங் செய்துள்ளனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கல்லூரியின் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்று வந்தது. மேலும் உடல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்பட்டோம் என்பதை அந்த மாணவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவையும் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், மாணவர்கள் அரை நிர்வாணத்துடன் கல்லூரி விடுதியை சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ, ட்விட்டரில் பிரதமர், தமிழ்நாடு முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் அக்கவுண்டுகளுக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது. விசாரணை நடந்து வருகிறது, அதற்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.எம்.சி கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ராகிங் செய்த 7 மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து டெல்லியில் இருக்கும் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்திருப்பதாக, தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர் கார்த்திக்கும் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உரிய நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“