விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் லியோ சிறப்புக் காட்சியின்போது விதிமீறல் ஏற்பட்டால் புகார் அளிப்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் புகார் எண்கள் அறிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகிறது. ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி அக்டோபர் 19-ம் தேதி காலை 9 மணிக்கு திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், லியோ படம் வெளியாகும் திரையரங்குகளில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக, திரையரங்குகள் முன்பு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது, ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் என்று திரையரங்குகள் உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சென்னையில் ‘லியோ’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் விதிமீறல் ஏற்பட்டால் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ‘லியோ’ படம் சிறப்புக் காட்சி திரையிடப்படும் திரையரங்குகளில் விதிமீறல் ஏற்பட்டால் புகார் அளிப்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் புகார் எண்கள் அறிவித்துள்ளார்.
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் திரையரங்குகளில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் வாகனங்கள் உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகளை திரையரங்க உரிமையாளர் செய்து கொள்ள வேண்டும்.
பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இருக்கைகள், திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும், விதிமீறல்கள் இருப்பின் பொது மக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் 9442999120, தாசில்தார்கள் வேலூர்- 9445000508, காட்பாடி 9445000510. குடியாத்தம்- 9445000509, பேர்ணாம்பட்டு- 9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“