vellore constitution : திராவிட மண் என அழைக்கப்படும் வேலூர் மாவட்டம் தற்போது மக்களவை தேர்தலுக்கு தயாராகி விட்டது.அரசியல் ரீதியாக வேலூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இப்போது களத்தில் இருக்கும் திராவிட தலைவர்கள் பலரும் வேலூரை சேர்ந்தவர்கள் தான்.
தேர்தல் தேதி அறிவிப்பு, பணப்பட்டுவாடா புகார், தேர்தல் ஆணையம் அதிரடி ஆக்ஷன், தேர்தல் ஒத்தி வைப்பு என பல்வேறு பரபரப்புக்களை சந்தித்த வேலூர் தொகுதியில் இறுதியாக வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின்றன.
தேர்தல் ஒத்தி வைப்பு:
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்பு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள், களத்தில் இறங்கி முழு வீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.
வேலூர் தொகுதிகளில் திமுக சார்ப்பில் திமுக பொருளாளர் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் நிறுத்தப்பட்டார். எப்போதுமே திமுக - அதிமுக இடையில் பலத்த போட்டி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்பதால் வேலூரிலும் இவர்கள் இருவருக்குமான போட்டியே பலமாக பார்க்கப்பட்டது.
அப்போது தான் வேலூர் தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வேலூரை தவிர்த்து 38 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைப்பெற்றது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் துரைமுருகன் இந்த தகவலை மறுத்திருந்தார். தேர்தல் நிறுத்தப்பட்டது திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மீண்டும் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என இரு தரப்பினரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக இந்த களேபரங்கள் அனைத்தும் ஓய்ந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக சார்ப்பில் கடந்த முறை போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் கடந்த முறை நாம் தமிழர் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஆவர். இம்முறை அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேலூர் தொகுதியில் களம் காணாமல் பின் வாங்கியுள்ளனர். எனவே, இப்போது மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
யார் கை ஓங்கும்?
சுமார் 10 லட்சம் வாக்காளர்களை கொண்ட வேலூர் தொகுதியில் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின், வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
வேலூர் தொகுதி இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 5 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளது. தற்போது அதிமுக சார்பாக களமிறங்கியுள்ள ஏ.சி சண்முகம் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். மேலும் 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தலில் அதிமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டுயிட்டும் வெற்றிபெற்றுள்ளார். சென்ற முறை எடுக்கப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்தக்கணிப்பு படி திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அடுத்த இடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழரும் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டது.
ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் என இருவருமே வலிமையான வேட்பாளர்கள் என்பதால் களத்தில் போட்டி மிக கடுமையாக உள்ளது.வேலூர் தொகுதிகள் அதிகபடியான சிறுபான்மையினர் வாக்குகள் என்பதால், திமுகவின் பலம் சற்று ஓங்கி இருந்தது. .சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட முறையில் சமூக வாக்குகள் இருப்பது அவருக்கு வலிமையைத் தருகிறது. இருவரும் சமபலத்துடன் மோதும் சூழல் உள்ளது.
களத்தில் வேட்பாளர்கள்:
வேலூரில் தன் மகனை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் துரைமுருகன் மிகவும் முனைப்புடன் இருக்கிறார். தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வேலூரிலே முகாம்மிட்டு உள்ளார். அதே போல் ஏ.சி சண்முகமும் தனது ஆதரவாளர்களுடன் வேலூர் முழுவதும் முக்கியமான நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏ.சி சண்முகத்தை தனியாக அழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
திமுக நிர்வாகிகளை அழைத்து, முழுவீச்சில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.திமுக வின் நம்பர் டூ தலைவரின் மகன், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மிக முக்கிய கட்சியின் தலைவர் இருவரில் யாருக்கு வெற்றி முகம் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.