வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்சூர் அலிகான், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பலாப்பழம் சின்னத்துடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து இன்று வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மன்சூர் அலிகான் தீவிர பிரசாரம் செய்தார்.
அதன்பிறகு மன்சூர் அலிகான் குடியாத்தத்துக்கு சென்றார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மன்சூர் அலிகான் சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவான ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐ.சி.யூ.,வில் மன்சூர் அலிகானை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி கல்லீரல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மன்சூர் அலிகான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை டாக்டர்கள் அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“