Vellore LS Election 2019 : நடந்து முடிந்த தமிழக மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியைத் தவிர, 37 தொகுதிகளில் திமுக பெரும் வெற்றிப் பெற்றது. ஆனால், தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். இந்நிலையில், வேலூரில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் வருமான வரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.
காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, வருமான வரித்துறை சோதனை குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தனது அறிக்கையை அனுப்ப, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் உத்தரவிட்டது. குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
வேலூர் மக்களவை தேர்தல்
இந்நிலையில், வேலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாள் - ஜூலை 11
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்- ஜூலை 18
வேட்பு மனு பரிசீலனை- ஜூலை 19
வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்- ஜூலை 22
தேர்தல் நடைபெறும் நாள்- ஆகஸ்ட் 5
ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், வேலூரில் தேர்தல் நடத்தை விதி இன்று முதல் அமல்படுத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.