நாளை வேலூர் மக்களவை தேர்தல் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இறுதிநேர பிரசாரம்

Vellore loksabha election : தி.மு.க. வேட்பாளராக கதிர்ஆனந்த், அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தி.மு.க. வேட்பாளராக கதிர்ஆனந்த், அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், இளையரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று ( ஆகஸ்ட் 3ம் தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

தலைவர்களின் இறுதிகட்ட பிரசாரங்களை இங்கே சுருக்கமாக காண்போம்…

முதல்வர் பழனிசாமி : அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. திமுகவில் கடுமையாக கோஷ்டி மோதல் இருக்கிறது. திமுக முன்னாள் மேயரை திமுக நிர்வாகியின் மகனே கொன்றுள்ளார். அவர்களை தமிழக போலீஸ் உடனடியாக கைது செய்தது. சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
உதயநிதி அரசியலுக்கு வருவது முன்பே திட்டமிடப்பட்டது. உதயநிதியை தலைவராக்குவதற்காகவே சில திரைப்படங்களில் நடிக்க வைத்தனர். தலைவர் மகனே தலைவராவது தான் வாரிசு அரசியல். திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமேதான் இருக்கிறது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் : இதை இறுதி கட்ட பிரச்சாரம் என்று சொல்வதைவிட, வெற்றி பெற்றதற்காக நடைபெறும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் என்று கூடச் சொல்லிவிடலாம். வெற்றி என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஆனால், எவ்வளவு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறப் போகிறோம் என்ற கேள்வியோடு மட்டும் தான் இந்த தேர்தல் களத்தில் நின்று கொண்டு இருக்கிறோம்.

அப்துல் கலாமை கசாப்பு கடைக்காரர் என்று சொல்லி ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது கருணாநிதி, என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆம்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். இஸ்லாமிய மக்கள் திமுக பக்கம் ஆதரவாக நிற்கிறார்கள், எனவே அதில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியுள்ளார்.
கருணாநிதியை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, அப்துல் கலாமை கொச்சைப்படுத்திய உங்களை நாடு மன்னிக்குமா? இஸ்லாமிய சமூகத்தில் உள்ளவர்கள் உங்களை ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள். கருணாநிதி அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லி இருக்கிறார் என்று நிரூபித்து விட்டால், அடுத்த நிமிடமே நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன். உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால், நான் கொடுக்கும் தண்டனையே நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாரா? இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பொய் பிரச்சாரங்களை திமுக செய்வதாக குறிப்பிட்டார்.
2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பழனிசாமி தான் முதல்வர் ஆவார். முதல்வர் பதவி எடப்பாடியாருக்கு தேடி வந்தது. காவிரி, கச்சத்தீவு, பாலாறு உட்பட அனைத்து பிரச்சனைகளிலும் பல சட்ட போராட்டங்களை நடத்தி, தமிழக உரிமைகளை நிலைநிறுத்துவதில் அதிமுக அரசு எப்போதும் முன்னணியில் இருக்கும்.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா : தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லை என்ற நிலையை அதிமுக அரசு உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட பிரேமலதா, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு செல்வதை தடுத்தவர் தான் துரைமுருகன் எனவும் விமர்சித்தார். வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட காரணமாக இருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ஒரு அவமான சின்னம் எனவும் அவர் விமர்சித்தார். வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் வாணியம்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும் பிரேமலதா உறுதி அளித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close