ஐபிஎல் போட்டிகளின் போது பாம்புகள் விட இருந்தது உண்மை தான் - வேல்முருகன்

ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டால், பாம்புகள் விடுவோம் என கூறியது உண்மை தான் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்

ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டால், பாம்புகள் விடுவோம் என கூறியது உண்மை தான் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதால் தான் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு கொடுப்பதில்லை. அதனால்தான் பிரதமர் மோடி சென்னை வந்த போது அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம். காவிரி பிரச்சினைக்காக போராடுகிற நேரத்தில், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தோம்.

ஆனால் அதையும் மீறி போட்டியை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டதால் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க மைதானத்தில் பாம்புகளை விடுவோம் என்று கூறினேன். அது உண்மை தான். போராட்டங்கள், எதிர்ப்புகள் அதிகமானதால் தமிழகத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்த முடியாமல் இப்போது வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டியை விரட்ட போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு காவிரி பிரச்சினையில் இன்னும் ஒரு தெளிவான முடிவை எடுக்காமல் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இதற்காக மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். ஆனால், போலீசார் இதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்” என்றார்.

×Close
×Close