வேல்முருகன் மீது அடுத்தடுத்து வழக்குகளை அரசு பாய்ச்சுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான பின்னணியாக பல்வேறு காரணங்கள் அலசப்படுகின்றன.
வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சியில் உருவாகி வளர்ந்தவர்! தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ஆரம்பித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார் வேல்முருகன். ஜெயலலிதா இருந்தவரை, அதிமுக கூட்டணியில் தொடர்ந்ததால் வேல்முருகன் தொடர்பான சர்ச்சைகள் அதிகமில்லை.
ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்த பிறகு வேல்முருகன் அதிமுக.வுக்கு எதிராகவும் விமர்சனங்களை வைத்து வருகிறார். காவிரி பிரச்னை முழு அடை போது, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் சுங்கச்சாவடியை அவரது கட்சியினர் அடித்து உடைத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தொடர்பாக வேல்முருகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு வேல்முருகன் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வந்த பிறகும், அவரை போலீஸார் கைது செய்யவில்லை. ஆனால் கடந்த 25-ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற வேல்முருகனை தூத்துக்குடியில் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், டிடிவி தினகரன் என யாருக்கும் எந்தப் பிரச்னையையும் கொடுக்காத அரசுத் தரப்பு, வேல்முருகனை மட்டும் கைது செய்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதன்பிறகு சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்ட வேல்முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே காவிரி பிரச்னைக்காக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் எதிரே கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வேல்முருகன் நடத்திய போராட்டத்திற்காக மே 30-ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவரை தேச துரோக வழக்கில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இன்று காலை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வேல்முருகன் திடீரென புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேச துரோக வழக்கை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.
வேல்முருகன் மீது அடுத்தடுத்து வழக்குகளை பாய்ச்சி, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் ஓராண்டுக்கு சிறையில் தள்ள திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மத்திய உளவு அமைப்புகள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் பாய்வதாக கூறப்படுகிறது.
வட தமிழகத்தின் முந்திரி காடுகளில் 1970-களிலும், 1980-களிலும் இயங்கிய தமிழ் தேசிய தீவிர அமைப்பின் உறுப்பினர்களில் பலர் தற்போது வேல்முருகன் கட்சியில் ஐக்கியமாகி வருவதாகவும், அவர்கள் தலையீட்டில்தான் டோல்கேட் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதாகவும் மத்திய உளவு அமைப்பு எச்சரிக்கை செய்திருக்கிறது. அதேபோல, தேசிய அளவில் ‘நெட்வொர்க்’ கொண்ட சிறுபான்மை அமைப்பு ஒன்றின் தமிழக பிரிவு சமீபகாலமாக வேல்முருகனுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை தொடர்கிறது.
தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியும் ஏற்காத அந்த அமைப்புக்கு, தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் வேல்முருகன் இடம் கொடுத்தது தொடர்பாகவும் மத்திய உளவு அமைப்பு எச்சரிக்கை செய்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தப் பின்னணியில்தான் வேல்முருகன் மீது அடுத்தடுத்து வழக்குகளை பாய்ச்சி, தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
வேல்முருகன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?