வேல்முருகன் ஜாமீன் மனு : பதிலளிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நெய்வேலி அனல்மின் நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சிலர் தாக்கினர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுக்களுக்கு வரும் திங்கள் கிழமை பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலைய காவல் ஆய்வாளர், உளுந்தூர்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

×Close
×Close