துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார் எனில் தொகுதி மக்களுக்கு சொல்ல வேண்டுமா? இல்லையா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் என் தொகுதிக்கு 4 ஆண்டுகளில் ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ குற்றம் சாட்டிப் பேசியதை, அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் அப்பாவு நீக்கினார். இதற்கு வேல்முருகன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த வேல்முருகன், கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட துணை முதல்வர் வருகிறார். ஆனால் புரட்டகால்படி மாவட்ட நிர்வாகம் எனக்கு எந்த தகவலும் சொல்லவில்லை. துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் எனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. இங்கே இருக்கிற மாவட்ட அமைச்சர்கள் 2 பேரிடமும் இருந்தும் எனக்கு தகவல் தரவில்லை. வேளாண்மை அமைச்சர் மட்டும் துணை முதல்வர் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக தகவல் தெரிவித்தார். ஒரு முதல்வர், துணை முதல்வர் வருகிறார் எனில் தொகுதி மக்களுக்கு சொல்ல வேண்டுமா? இல்லையா? எந்த ஒரு திட்டமிடலும் இல்லாத நிலையில் எதற்கு பேரிடர் துறை அமைச்சர்? எதற்கு பேரிடர் துறை? ரொம்ப வருத்தமாக இருக்கிறது.” என்று வேல்முருகன் கூறினார்.
தொடர்ந்து பேசிய வேல்முருகன், “கால் நூற்றாண்டு காலமாக இந்த பிரச்சனை பற்றி சட்டசபையில் பேசி வருகிறேன். மழைக்கால கூட்டத் தொடரை குறைந்தபட்சம் 10 நாட்களாவது நடத்துங்க என கதறுகிறேன். சட்டசபையில் குரல் கொடுக்கிறேன். அந்த குரலுக்கு செவி சாய்க்கவில்லை. வெறும் 2 நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடத்தினால் எப்படி? ஆண்டுக்கு ஒரு முறை 100 நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவோம் என தி.மு.க தேர்தல் அறிக்கை சொல்கிறது. ஆனால், ஏன் அதனை நிறைவேற்றவில்லை?” என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
மேலும், “தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. தாமிரபரணி கரை புரண்டோடுகிறது. அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செய்கிறார்கள். இதனால் பல உயிர்கள் பலியாகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 உயிர்கள் பலியானதாக அமைச்சர் தெரிவிக்கிறார்; ஆனால், தமிழ்நாடு அரசு எத்தனை பேர் பலியானார்கள் என்று முழுமையாக அறிவிக்கவில்லை. நவம்பர், டிசம்பர் மாதம் மழைக்காலம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை கழகத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ காட்டமாகக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“