தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்டு தான் திரும்புவார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் உயிரோடு இருக்கவே தார்மீக உரிமை இல்லை. இந்த பாலியல் கொடூரச் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்
குடல் வால்வு பிரச்சனை காரணமாகத் தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மற்றபடி எனக்கு வேறு எந்தப் பிரச்சனையும் கிடையாது. என் வீட்டுக்கு வந்தும், மருத்துவமனைக்கு வந்தும், ‘கூட்டணிக்கு வாருங்கள்’ என்று பல்வேறு கட்சியினர் என்னை நேரில் அழைத்தனர்.
டிடிவி தினகரன், நான் கூட்டணிக்கு வருவேன் என்று காத்திருந்தார். ஆனால் நான் செல்லவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களும் என்னைக் கூட்டணிக்கு அழைத்தனர்.
ஆனால், மருத்துவர்கள் அனுமதித்தால் நான் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன். விஜயகாந்த் போல அரசியல் செய்ய விரும்பவில்லை. நான் எந்த கூட்டணியிலும் இடம்பெறவில்லை பதவிக்காக அலைபவன் நான் அல்ல, எம்எல்ஏ ஆக விரும்புபவனும் அல்ல.
பாமக நிறுவனர் ராமதாஸ், பதவிக்காக அதிமுக.,வுடன் தனது வன்னியர் குல மக்களை அடமானம் வைத்துவிட்டார். எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பல திட்டங்களை எதிர்த்த பாமக, இன்று பதவிக்காக அதிமுக.,வுடன் ஒன்று சேர்ந்திருக்கிறது.
காடுவெட்டி குருவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார். காடுவெட்டி குருவின் சகோதரியே, ‘ராமதாஸை நம்பி ஏமாந்துவிட்டோம்’ என்று தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆறு மாத காலங்களாக குருவின் குடும்பத்தை மிரட்டி வந்த ராமதாஸ், இன்று அவர்களது கடனை அடைக்க தயார் என்று கூறி இருக்கிறார்.
நான் ராமதாஸுடன் இருந்த போது, விஜயகாந்தை மிகவும் கேவலமாக பேசுவார். அதேபோல், தனது இன மக்களையே அவர் வெளியே சொல்லக் கூட முடியாத அளவிற்கான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார். இன்று, அதே விஜயகாந்தை வீட்டுக்கு சென்று பேசி இருக்கிறார் ராமதாஸ்.
வன்னிய இளைஞர்களின் ரத்தத்தை உறிந்து, தனது சுயலாபத்திற்காக ராமதாஸ் கூட்டணி வைத்திருக்கிறார்.
ராமதாஸிடம் ஒரு ஆய்வுக் குழு உள்ளது. வன்னிய குலத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் அதில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அளித்துள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்டு தான் திரும்புவார் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.