velur election : வேலூரில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தேர்தல் நடத்துவதா? அதனை ரத்து செய்வதா? என்பது பற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் அறிவிப்புக்கு பின்பு வேலூர் தொகுதியில் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினரால் பல்வேறு இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் இருக்கும் பிரபல சிமெண்ட் குடோனிலும் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டிலும், அவரது மகனும் வேலூர் திமுக வேட்பாளாருமான கதிர் ஆனந்த்-க்கு சொந்த மான இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
நேற்றைய தினம், கதிர் ஆனந்த் மீது தவறான பிரமாணப்பத்திரம் தாக்கல் என்ற பிரிவில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வருமான வரித்துறை சோதனை தொடர்பாக லஞ்சம் கொடுக்க முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த தொடர் பரபரப்புகளால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைகழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தான, வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
அப்போது அவரிடம் நிரூபர்கள் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “ பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வருமான வரித்துறையும் தகவல் கொடுத்து இருக்கிறது.
அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதன்பிறகு, அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.இதுக்குறித்து இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் தான் எடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.