/indian-express-tamil/media/media_files/2025/05/24/vM6Jh8BmjK9846oiDvca.jpg)
வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு: 5,000+ அரிய பொருட்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அமைந்துள்ள விஜய கரிசல்குளத்தில் நடைபெற்றுவந்த 3-ம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இதில் 5 ஏக்கரில் மட்டுமே அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதனால், தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியான 3 கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது, முதற்கட்டத்தில் 3 ஆயிரத்து 254, 2-ம் கட்டத்தில் 4 ஆயிரத்து 653, 3-ம் கட்டத்தில் 5 ஆயிரத்து 3 என மொத்தமாக 12 ஆயிரத்து 910 அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், சூது பவள மணி, தங்கமணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், சுடுமண் உருவ பொம்மைகள் உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
பல்வேறு அகழாய்வு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விட, விஜய கரிசல்குள அகழாய்வில் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், இங்கு மட்டுமே கிடைத்த அலங்கரிக்கப்பட்ட வண்ண சங்கு வளையல்கள் மற்றும் சூது பவள மோதிரக்கல் போன்றவை தொல்லியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் இப்பணிக்காக எந்த நிதியும் ஒதுக்கப்படாததால், திட்டமிட்டபடி 2025 மே மாதம் வரை நீடிக்க வேண்டிய அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் முன்னோர்களின் முழுமையான வரலாற்றை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு முற்றிலுமாக கிடையாது எனவும், சில இடங்களில் முதுமக்கள் தாழி (வழிபாட்டு இடங்கள்) கண்டெடுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான ஆய்வுகள் நடைபெறவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அறிவார்ந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வெளிக்கொணர இது போன்ற அகழாய்வுப் பணிகள் தொடர வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.